இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா மீது இந்தியாவை சேர்ந்த விமான பணிப்பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

மீ டு என்ற இயக்கத்தின் மூலம் நாடு முழுவதும் சினிமா உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த பெண்கள், தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை அம்பலப்படுத்தி வருகின்றனர். இனிமேல் இதுபோன்ற பாலியல் அத்துமீறல்கள் எந்த துறையில் பணிபுரியும் பெண்களுக்கும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக சினிமா பிரபலங்கள் மற்றும் பிரபலமல்லாத மற்ற பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை துணிச்சலுடன் பதிவிட்டுவருகின்றனர். 

நானே படேகர் மீது தனுஸ்ரீ பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். பெண் பத்திரிகையாளர் ஒருவர் கவிஞர் வைரமுத்து தன்னிடம் அத்துமீறியதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணுக்கு ஆதரவாக வைரமுத்துவிற்கு எதிராக சின்மயி டுவீட் செய்திருந்தார். சின்மயியின் கருத்தை நடிகை சமந்தா ஆமோதித்துள்ளார்.

இவ்வாறு நாடு முழுவதிலும் பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்களை அம்பலப்படுத்திவருகின்றனர். இந்நிலையில், இலங்கை அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுத்த அந்த அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா மீது இந்தியாவை சேர்ந்த விமான பணிப்பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில், மும்பை ஜூஹு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் தங்கி இருந்தனர். அப்போது, இலங்கை வீரர்களிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்காக தோழியுடன் சென்றிருந்தேன். அப்போது ரணதுங்கா என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். எனக்கு பயமாக இருந்தது. எனது இடுப்பை பிடித்து தவறான கண்ணோட்டத்தில் என்னை தொட்டார். அவரை தட்டிவிட்டு ஓடிவந்து ஓட்டல் வரவேற்பறையில் ஊழியர்களிடம் தெரிவித்தோம். அது உங்களுடைய தனிப்பட்ட விஷயம். அதில் தலையிட முடியாது என்று கூறிவிட்டார்கள் என்று முகநூலில் பதிவிட்டுள்ளார்.