Indian team defeated New Zealand by a 3-0 win

26-ஆவது அஸ்லான் ஷா கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டியின் இரண்டாவது நாளில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்தை வீழ்த்தி கர்சித்தது.

26-ஆவது அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டி மலேசியாவின் ஈபோ நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியாவும், நியூஸிலாந்தும் எதிர்கொண்டன.

இந்த ஆட்டத்தின் 6-ஆவது நிமிடத்தில் நியூஸிலாந்து அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த அணியின் கோல் வாய்ப்பை இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் முறியடித்தார்.

அபாரமாக ஆடிய இந்திய அணி 23-ஆவது நிமிடத்தில் ஆட்டத்தின் முதல் கோலை அடித்தது. சிங்லென்சனா சிங் அடித்த "ரிவர்ஸ் ஷாட்'டை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மன்தீப் சிங், அதை மிக அற்புதமாக கோலாக்கினார்.

27-ஆவது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் பின்கள வீரரான ஹர்மான்பிரீத் சிங் அசத்தலாக கோலடிக்க, இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.

இதன்பிறகு கிடைத்த 4 பெனால்டி வாய்ப்புகளை இந்திய அணி கோட்டைவிட, 6-ஆவது பெனால்டி வாய்ப்பில் மீண்டும் ஹர்மான்பிரீத் சிங் கோலடித்தார்.

இதனால் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

கடைசி வரை போராடிய நியூஸிலாந்து அணி கோல் அடிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தது.

இதுவரை இரு ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்திய அணி 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது.