வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு எதிரான 12 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என வென்றுவிட்ட நிலையில், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது. 

முதல் இரண்டு போட்டிகளுக்கான அணி 14 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அந்த 14 பேரில் முதல் போட்டிக்கு 12 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்க உள்ள உலக கோப்பை தொடருக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவாகவே உள்ளது. இந்நிலையில், இந்திய அணியில் மிடில் ஆர்டரில் பிரச்னை நிலவுகிறது. அதற்கான தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. 

அதற்காக பல வீரர்களை சுழற்சி முறையில் சோதனை செய்யப்படுகின்றனர். ஆசிய கோப்பையில் ஆடிய தினேஷ் கார்த்திக், வாய்ப்பை சரியாக பயன்படுத்தாததால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் சேர்க்கப்படவில்லை. அம்பாதி ராயுடு, மனீஷ் பாண்டே, ராகுல் ஆகியோர் 14 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர். அதேபோல கிடைத்த வாய்ப்பை எல்லாம் அருமையாக பயன்படுத்திவரும் ரிஷப் பண்ட்டும் ஒருநாள் அணியில் இடம்பிடித்திருந்தார். 

இந்த 14 பேரிலிருந்து 12 பேர் கொண்ட இந்திய அணி முதல் போட்டியில் ஆடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ராகுல் மற்றும் மனீஷ் பாண்டே ஆகிய இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மனீஷ் பாண்டே, இதற்கு முன்னர் அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்தாமல் தவறவிட்டார். அதனால் ஆடும் லெவனில் இந்த முறை இடம் கிடைக்கவில்லை. ராகுல் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதால், ஏற்கனவே ரோஹித், தவான், கோலி ஆகியோர் முதல் மூன்று இடங்களை நிரந்தரமாக ஆக்கிரமித்துள்ளதால் ராகுலுக்கும் வாய்ப்பு இல்லை. 

ஆசிய கோப்பையில் அறிமுகமான இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவிற்கு 12 பேர் கொண்ட அணியில் இடம் கிடைத்துள்ளது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான 12 வீரர்களை கொண்ட இந்திய அணி:

ரோஹித் சர்மா(துணை கேப்டன்), தவான், கோலி(கேப்டன்), அம்பாதி ராயுடு, ரிஷப் பண்ட், தோனி(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், ஷமி, உமேஷ் யாதவ், கலீல் அகமது.