ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டியில் இலங்கைக்கு எதிராக விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதில், கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர். அதனால் ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மூத்த வேகப்பந்து வீச்சாளர்களான உமேஷ் யாதவ், முகமது சமி மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு உள்ளதால் இளம் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், அக்ஷர் படேல், யுவேந்திர சாஹல் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

மேலும், மூத்த ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அவருடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது.

இதுவரை 304 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள யுவராஜ் சிங், 8 ஆயிரத்து 701 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதுதவிர 40 டெஸ்ட் போட்டி மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், மணீஷ் பாண்டே, ஹார்திக் பாண்டியா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், புவனேஸ்வர் குமார், ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரித் பூம்ரா, அஜிங்க்ய ரஹானே.

இவர்கள் அனைவரும் பங்கேற்கும் ஒரு நாள் தொடர் வரும் 20-ஆம் தேதி தொடங்குகிறது.