Indian Super League Jamshedpur won the fifth victory in Chennai

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 33-வது ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை வெற்றிக் கொண்டது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 33-வது ஆட்டம் ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நேற்று இரவு நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய சென்னை அணி, ஜாம்ஷெட்பூரை அதன் சொந்த மண்ணில் சற்றும் சளைக்காமல் எதிர்கொண்டது. இதனால் ஆட்டம் கோல் இன்றி நீண்டது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல் பாதி முடியும் நிலையில் கோலடித்தார் சென்னை வீரர் ஜிஜி. ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பில், ஜாம்ஷெட்பூர் கோல் கீப்பர் சுப்ரதா பாலை எளிதாக ஏமாற்றி ஜிஜி கோலடித்தார்.

இதனால் முதல் பாதியிலேயே சென்னை 1-0 என முன்னிலை பெற்றது. பின்னர் நடைபெற்ற இரண்டாவது பாதியில் இரு அணிகளுக்கும் கோல் வாய்ப்பு கிடைக்காததால், சென்னை அணி வெற்றி பெற்றது.

இத்துடன் எட்டு ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை அணி 5 வெற்ரிகளையும், 2 தோல்விகளையும், ஒரு ஆட்டத்தை சமன் செய்துள்ளது. இந்த பட்டியலின்படி புள்ளிகள் பட்டியலின் முதலிடத்தில் உள்ளது சென்னை என்பது குறிப்பிடத்தக்கது.