இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டத்தில் சென்னையின் எஃப்சி - எஃப்சி கோவா அணிகளுக்கு இடையேயான அரையிறுதியின் 2-வது பகுதி ஆட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

சென்னையின் எஃப்சி - எஃப்சி கோவா அணிகளுக்கு இடையேயான அரையிறுதியின் முதல் பகுதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. 

எனவே, இந்த ஆட்டத்தில் இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு சமமாக உள்ளது. இதில் சென்னை அணி சொந்த மண்ணில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்த முனையும் நிலையில், தனது முதல் சாம்பியன் வாய்ப்புக்காக போராடும் கோவா அதற்கு சவால் அளிக்கும். 

இந்த சீசனில் கோவா இதுவரை 43 கோல்கள் அடித்துள்ள நிலையில், சென்னை 25 கோல்களே அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையின் நடுகள வீரர்களான தனபால் கணேஷ், பிக்ரம்ஜித் சிங் ஆகியோர் கோவாவின் தாக்குதல் ஆட்டத்துக்கு தடுப்பு ஏற்படுத்துவார்கள். 

மெயில்சன் ஆல்வ்ஸ், ஹென்ரிக் செரீனோவும் அணிக்கு பலமாகத் திகழ்கின்றனர். நட்சத்திர ஸ்டிரைக்கரான ஜேஜே மீது, பயிற்சியாளர் கிரேகரி மட்டுமல்லாமல், சென்னை அணியின் ஒட்டுமொத்த ரசிகர்களும் நம்பிக்கை வைத்துள்ளனர்.