வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்ட நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை ஹைதராபாத்தில் தொடங்குகிறது. 

ஒருநாள் தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. அணி தேர்வு குறித்து தேர்வுக்குழு இன்று ஆலோசித்து அணி விவரத்தை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர் அல்லது டி20 தொடர் மட்டும் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் பட்சத்தில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார். ரோஹித் சர்மா ஆசிய கோப்பை தொடரில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு கவனத்தை ஈர்த்துள்ளார். 

விராட் கோலி ஆடினாலும் ஆடாவிட்டாலும் அம்பாதி ராயுடுவிற்கான இடம் உறுதி. ஆசிய கோப்பையில் விராட் கோலி ஆடாததால் அவர் களமிறங்கும் மூன்றாவது வரிசையில் களமிறங்கி ஓரளவிற்கு சிறப்பாகவே ஆடினார் ராயுடு. எனவே கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் பட்சத்தில் மூன்றாவது வரிசையிலும் கோலி ஆடினால் நான்காவது வரிசையிலும் களமிறங்குவார்.

விக்கெட் கீப்பிங்கில் மிகச்சிறப்பாக செயல்பட்டுவரும் தோனி, பேட்டிங்கில் ஃபார்ம் இல்லாமல் தவித்துவருகிறார். எனவே பேட்டிங்கில் அந்த இடத்தை பூர்த்தி செய்வது குறித்து மிகத்தீவிரமாக தேர்வுக்குழு ஆலோசிக்க உள்ளது. தோனி 2019 உலக கோப்பை வரை ஆடுவது உறுதியாகிவிட்டது. எனினும் அவருக்கு பிறகு அந்த இடத்தை பூர்த்தி செய்யும் விதத்தில் ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டிய அவசியமும் உள்ளது. எனவே தோனிக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட் சேர்க்கப்படலாம் அல்லது விக்கெட் கீப்பராக வழக்கம்போல தோனியும் ரிஷப் பண்ட் பேட்ஸ்மேனாக மட்டும் தேர்வுசெய்யப்படலாம் என தெரிகிறது. 

இதுகுறித்து பேசிய பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர், தோனி கண்டிப்பாக 2019 உலக கோப்பை வரை ஆடுவார். அதேநேரத்தில் 6 மற்றும் 7வது வரிசையில் அபாயகரமான வீரராக இருக்கும் ரிஷப் பண்ட், போட்டியை வெற்றிகரமாக முடித்துவைக்கும் திறன் பெற்றவர் என்பதால் அவருக்கான வாய்ப்பிற்கும் பங்கம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

மிடில் ஆர்டரை பொறுத்தமட்டில் அம்பாதி ராயுடு, ரிஷப் பண்ட் ஆகியோர் இருப்பர். இவர்களைத் தவிர மற்ற வீரர்கள் யார் என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. மனீஷ் பாண்டே ஆசிய கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. ஃபீல்டிங்கில் அசத்தும் பாண்டே, பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பிவருகிறார். 

கேதார் ஜாதவ் தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வருகிறார். ஆசிய கோப்பையில் ஆட கிடைத்த வாய்ப்பை தினேஷ் கார்த்திக் பெரியளவில் பயன்படுத்திக்கொள்ளவில்லை. தினேஷ் கார்த்திக் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது மற்றும் முக்கியமான தருணங்களில் போட்டியை வெற்றிகரமாக முடித்துவைக்க திணறுவதும் அவர் மீது தேர்வுக்குழுவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

ரவீந்திர ஜடேஜா ஆல்ரவுண்டராக கண்டிப்பாக அணியில் இருப்பார். டெஸ்ட் தொடரில் ஓய்வளிக்கப்பட்ட புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய இருவரும் ஒருநாள் தொடரில் அணிக்கு திரும்புவர்.