ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என தொடர்ந்து வெளிநாடுகளில் தோல்வியை தழுவி வந்த இந்திய அணிக்கு, புதிய உத்வேகத்தை அளிக்கும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் வெற்றி அமைந்துள்ளது. 

இந்த தொடர் முழுவதுமே இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலுமே ஆஸ்திரேலிய அணியின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடியது. எப்போதும் மிகச்சிறந்த பேட்டிங் அணியாக மட்டுமே வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய அணி, இந்த முறை மிகச்சிறந்த வலுவான பவுலிங் யூனிட்டுடன் ஆஸ்திரேலியாவுக்கு சென்றது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை கொண்ட ஆஸ்திரேலியாவுக்கு மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களுடன் சென்றது இந்திய அணி.

இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் திணறிய பேட்டிங் யூனிட் மற்றும் இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியாத பவுலிங் யூனிட் என பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலுமே சொதப்பியது ஆஸ்திரேலிய அணி. ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததால் அனுபவமற்ற பேட்டிங் வரிசையுடன் இந்தியாவை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணி, வேகப்பந்து வீச்சை சார்ந்தே இருந்தது. ஆனால் கம்மின்ஸை தவிர மற்ற பவுலர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. ஸ்பின்னை பொறுத்தமட்டில் நாதன் லயன் தனது பணியை செவ்வனே செய்தார். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டார்க் பெரிதாக சோபிக்கவில்லை. 

இந்த டெஸ்ட் தொடரில் 13 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். ஆஸ்திரேலிய பவுலர்கள் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்காத நிலையில், பும்ரா, ஷமி, குல்தீப், ஜடேஜா ஆகியோர் அருமையாக வீசி ஆஸ்திரேலிய அணிக்கு டஃப் கொடுத்து வெற்றியையும் பறித்தனர். இது அந்த அணிக்கு பெருத்த அடியாக விழுந்தது. அதனால் அணியில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததாலும் அணியின் சீனியர் பவுலர் என்ற முறையிலும் ஸ்டார்க் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அவரை குறைத்து மதிப்பிட்டு கூட சில கருத்துகள் வெளிவந்தன. ஆஸ்திரேலிய அணி தொடரை இழந்ததற்கு ஸ்டார்க் தான் காரணம் என்பதுபோல அவர் மீது விமர்சனங்கள் குவிக்கப்பட்டது. 

இந்நிலையில், ஸ்டார்க்கிற்கு ஆதரவாக இந்திய அணியின் கேப்டன் கோலி பேசியிருக்கிறார். இதுகுறித்து பேசிய விராட் கோலி, ஸ்டார்க் மிகத்திறமையான பவுலர். அவர் நல்ல மனநிலையில் ஆடக்கூடியவர். ஆஸ்திரேலிய அணியின் நம்பர் 1 பவுலராக நீண்டகாலமாக இருந்துவருகிறார். அப்படியிருக்கையில், அவர் மீதான விமர்சனங்கள் எனக்கு வியப்பளிக்கிறது. உங்கள் அணியின் சிறந்த பவுலராக இருப்பவருக்கு, அவருக்கு தேவையான சுதந்திரத்தையும் ஃபார்மில் இல்லாமல் இருந்தால் அதிலிருந்து மீள கால அவகாசமும் வழங்க வேண்டுமே தவிர அவரை நெருக்கடிக்கு ஆளாக்கக்கூடாது. ஸ்டார்க்கை போன்ற மிகத்திறமையான மற்றும் போட்டிகளை வென்று கொடுக்கக்கூடிய வீரர்களை இழந்துவிடக்கூடாது என்று ஸ்டார்க்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் விராட் கோலி. 

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல்லில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியில் ஆடியுள்ளார். அதனால் மிட்செல் ஸ்டார்க்கின் திறமையையும் தனிப்பட்ட முறையிலும் விராட் கோலி அவரை அறிவார் என்பது குறிப்பிடத்தக்கது.