இளம் வீரர் பிரித்வி ஷாவை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புகழ்ந்து தள்ளியுள்ளார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என வென்றது. இந்த தொடரில் அறிமுகமான இளம் வீரர் பிரித்வி ஷா, அபாரமாக ஆடி தனது திறமையின் மூலம் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் போட்டியில் அறிமுகமாகி, அறிமுக போட்டியிலேயே அபாரமாக ஆடி சதமடித்தார். இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 70 ரன்கள் குவித்து, அவசரப்பட்டு சதமடிக்க முடியாமல் அவுட்டானார். இரண்டாவது இன்னிங்ஸில் 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

அறிமுக போட்டியிலேயே சற்றும் பயமோ பதற்றமோ இல்லாமல் தனது இயல்பான ஆட்டத்தை ஆடினார். பயமில்லாத இயல்பான அவரது ஆட்டம்தான் அவரது மிகப்பெரிய பலமாக இருக்கிறது. அறிமுகமான முதல் தொடரிலேயே தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தினார். 

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரை வென்றதற்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பிரித்வி ஷாவை புகழ்ந்து தள்ளினார். பிரித்வி ஷா குறித்து பேசிய விராட் கோலி, பிரித்வி ஷா பயமில்லாமல் துணிச்சலாக தனது இயல்பான ஆட்டத்தை ஆடுகிறார். எந்த மாதிரியான தொடக்கம் அணிக்கு தேவையோ அப்படி ஆடுகிறார். அவர் அதிரடியாக அடித்து ஆடினாலும் தெளிவாகவே ஆடுகிறார். அவரது ஆட்டத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து ஆடுகிறார். அவர் ஆடுவதை பார்க்கையில், இவர் எட்ஜ் ஆகி அவுட்டாகிவிடுவார் என்று தோன்றலாம். ஆனால் எட்ஜ் ஆகாத அளவிற்கு தெளிவாக ஆடுகிறார். இங்கிலாந்தில் வலைப்பயிற்சியின் போதே பிரித்வியின் ஆட்டத்தை பார்த்தோம். 

புதிய பந்தில் அதிரடியாக ஆடினாலும் கட்டுப்பாட்டோடு ஆடுகிறார். இது சாதாரண விஷயமல்ல; மிகவும் கடினமான விஷயம். ஆனால் அதை அசாதாரணமாக செய்கிறார். இவரது வயதில் நாங்களெல்லாம் இவரது திறமையில் 10% கூட பெற்றிருக்க மாட்டோம் என விராட் கோலி புகழாரம் சூட்டினார்.