ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்ற கையோடு நியூசிலாந்துக்கு சென்ற இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்றுள்ளது. 

5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், மூன்றிலுமே வெற்றி பெற்று தொடரை வென்றது இந்திய அணி. இந்த தொடர் முழுவதுமே நியூசிலாந்து அணியின் மீது ஆதிக்கம் செலுத்தி அபாரமாக ஆடிய இந்திய அணி, சொந்த மண்ணில் அந்த அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. 

தொடரை வென்ற மகிழ்ச்சியில் கேப்டன் விராட் கோலி, கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடர் ஆகியவற்றில் ஆடாமல் ஓய்வெடுக்க போகிறார். அவருக்கு பதிலாக இளம் வீரர் ஷுப்மன் கில் அணியில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மூன்றாவது ஒருநாள் போட்டியில் வென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இந்திய அணியை வெகுவாக பாராட்டியதோடு இளம் வீரர்களின் திறமைகளை புகழ்ந்து பேசினார். 

கடைசி 2 போட்டிகளில் தனது இடத்தில் ஆடப்போகும் கில் குறித்தும் இளம் வீரர்கள் குறித்தும் பேசிய விராட் கோலி, மிகச்சிறந்த இளம் திறமைசாலிகள் அணிக்கு வந்துகொண்டிருக்கின்றனர். பிரித்வி ஷா தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொண்டதை பார்த்தோம். ஷுப்மன் கில் வியப்பளிக்கக்கூடிய திறமைசாலி. வலையில் அவர் பேட்டிங் ஆடியதை பார்த்து வியந்துபோனேன். 19 வயதில் அவரது திறமையில் 10 சதவிகிதம் கூட எனக்கு கிடையாது. அந்தளவிற்கு தன்னம்பிக்கையுடன் இளம் வீரர்கள் ஆடுகின்றனர். இது இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு ரொம்ப நல்ல விஷயம் என்று புகழ்ந்து பேசினார்.