இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய அணி. 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. சொந்த மண்ணில் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, அதேபோலவே சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. 

இரண்டு டி20 போட்டிகளும் அதன்பிறகு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்க உள்ளது. முதல் டி20 போட்டி இன்னும் சற்று நேரத்தில்(7மணிக்கு) விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.

சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி உள்ள நிலையில், உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடர் இது என்பதால், இதில் வென்று அதே உத்வேகத்துடன் உலக கோப்பைக்கு செல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அந்நிய மண்ணிலேயே வெற்றிகளை குவித்து வரும் வலுவான இந்திய அணியை, சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. 

இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்குகின்றன. இந்நிலையில், இந்த போட்டி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் பிக்பேஷ் லீக் தொடரில் அபாரமாக ஆடினர். இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி கண்டிப்பாக கடும் சவால் அளிக்கும். இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டியாகத்தான் இருக்கும். ஆஸ்திரேலிய அணியில் ஒரு வீரரை குறிப்பிட வேண்டுமென்றால் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆட்டத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்துவார். அவர் பிக்பேஷ் லீக் உட்பட அனைத்து போட்டிகளிலுமே தொடர்ந்து பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார் என்று கோலி தெரிவித்தார்.