Indian shooter wins silver medal in shooting shootings
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஷாஸார் ரிஸ்வி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தென் கொரியாவின் சாங்வோன் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இந்தப் போட்டியின் முதல் 2 நாள்களில் இந்தியா பதக்கம் ஏதும் வெல்லவில்லை. இந்நிலையில், 3-ஆம் நாளான நேற்று ஆடவருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் ஷாஸார் ரிஸ்வி, ஓம் பிரகாஷ் மிதர்வால், ஜிது ராய் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில், இறுதிச்சுற்றில் ரிஸ்வி 239.8 புள்ளிகள் பெற்று 2-ஆம் இடம் பிடித்தார். அவர், 0.2 புள்ளி வித்தியாசத்தில் முதலிடத்தை இழந்தார்.
இதில், ரஷியாவின் ஆர்டெம் செர்னெளசோவ் 240 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். பல்கேரியாவின் சாமுயில் டோன்கோவ் 217.1 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார்.
இதனிடையே, இதர இந்தியர்களான ஓம் பிரகாஷ் மிதர்வால் மற்றும் ஜிது ராய் இருவரும் இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
