indian selected as International Cricket Council President

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இந்தியாவின் ஷசாங்க் மனோகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

பிசிசிஐயின் முன்னாள் தலைவரான மனோகர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக அதன் ஆட்சிக் குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இரண்டாவது முறையாக இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஐசிசி இயக்குநரும் ஒரு வேட்பாளரை நியமிக்கலாம். இரண்டு அல்லது அதற்கு அதிகமான இயக்குநர்களால் நியமிக்கப்படும் வேட்பாளர் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம்.

தற்போதைய தலைவர் பதவிக்கு ஷசாங்க் மனோகர் மட்டுமே போட்டியில் இருந்தார். வேறு எவரும் போட்டியிடவில்லை. இதனால் அவர் தேர்வு செய்யப்பட்டார், 

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐசிசியில் பல்வேறு மாற்றங்களை மனோகர் அறிமுகம் செய்தார். கடந்த 2014-ல் நிறைவேற்ற தீர்மானங்களை திரும்பப் பெற்றது, புதிய நிர்வாக அமைப்பு, முதல் முறையாக பெண் இயக்குநர் நியமனம் போன்றவை இதில் அடங்கும்.

இதுகுறித்து மனோகர், "மீண்டும் தேர்வு செய்யப்பட்டது பெருமையாக உள்ளது. இதற்காக சக இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தோம். அடுத்து வரும் 2 ஆண்டுகளில் கிரிக்கெட்டை உலகளவில் மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

விளையாட்டு நல்ல நிலையில் இருப்பது நிர்வாகிகளின் தொடர் சீரான பணிகளில்தான் உள்ளது" என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.