இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள், 19 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர். 

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் முதல் இன்னிங்ஸில் பந்துவீச முடியவில்லை. முதல் இன்னிங்ஸின் பெரும்பாலான நேரம் ஓய்வறையிலேயே இருந்தார். 

எனினும் முதல் இன்னிங்ஸில் ஹர்திக் பாண்டியா அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் அஷ்வினின் தேவை ஏற்படவில்லை. முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தினர். 

அதேபோல இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் வேகப்பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தினர். இம்முறை பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். கடைசி விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தினார். இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை தவிர மற்ற 19 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தினர். 

இதன்மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்திய அதிகபட்ச விக்கெட்டுகள் இதுதான். இதற்கு முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 20 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தியதுதான், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களால் வீழ்த்தப்பட்ட அதிகபட்ச விக்கெட்டுகள். அதற்கு அடுத்தபடியாக இது அமைந்துள்ளது. 

இந்த போட்டியில் மட்டுமே இதைத்தவிர ஏராளமான சாதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ராகுல் - தவான் தொடக்க ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 60 ரன்களை சேர்த்ததும் ஒரு அரிய விஷயமாக இருந்தது. மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கங்குலியின் கேப்டன்சியில் வெற்றி பெற்றதை விட அதிகமான டெஸ்ட் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.