Indian Overseas Indian Bank wins

சென்னையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான அழைப்பு வளைகோல் பந்தாட்ட போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி அணிகள் வெற்றி பெற்றன.

இந்தியன் வங்கி கோப்பைக்கான மாநில அளவிலான அழைப்பு வளைகோல் பந்தாட்ட போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, தெற்கு இரயில்வே, ஐசிஎப், தமிழ்நாடு காவல்துறை, வருமான வரித்துறை, சென்னை சிட்டி போலீஸ், இந்திய விளையாட்டு ஆணையம், மத்திய கலால் வரித்துறை, ஹாக்கி அகாதெமி, கணக்குத் தணிக்கைத் துறை (ஏஜிஎஸ்), லயோலா கல்லூரி ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.

மூன்றாவது நாளான நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐஓபி அணியும், லயோலா கல்லூரி அணியும் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் மழை பொழிந்தன. இறுதியில் ஐஓபி அணி 8-5 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஐஓபி தரப்பில் ரஃபேல், ஹர்மான்பிரீத் சிங், முத்துசெல்வன், வினோத் ராயர், அபிஷேக், மங்கள் கிஸ்போட்டா, பிதாப்பா, ரபீக் ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர்.

லயோலா கல்லூரி தரப்பில் ராஜா, சந்தீப், அக்ஷய், நாகர்ஜுன், சிவகுரு ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர்.

லயோ கல்லூரி வீரர் தமிழ்ச்செல்வன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை சிட்டி போலீஸ் அணியைத் தோற்கடித்தது.

இந்தியன் வங்கி தரப்பில் கோலடித்த ஞானவேல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.