இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார், அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். 

உத்தர பிரதேசத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் 2007ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக பிரவீன் குமார். 

2007ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டுவரை இந்திய அணிக்காக ஆடினார். இந்திய அணிக்காக 68 ஒருநாள், 6 டெஸ்ட் மற்றும் 10 டி20 போட்டிகளில் ஆடி 112 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 66 முதல்தர போட்டிகளிலும் 139 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் ஆடியுள்ளார். கடைசியாக 2012ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் ஆடியதுதான். அதன்பிறகு இந்திய அணிக்காக பிரவீன் குமார் ஆடவில்லை. காயம் காரணமாக விலகிய பிரவீன் குமார், அப்படியே ஓரங்கட்டப்பட்டார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக இந்திய அணியில் ஆட வாய்ப்பு கிடைக்காமல் இருந்துவந்த பிரவீன் குமார், சர்வதேச கிரிக்கெட் மற்றும் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிமிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் இருந்து திறமையான பல இளம் வீரர்கள் உருவாகி கொண்டிருக்கின்றனர். அவர்கள் ரஞ்சி டிராபியில் ஆட வாய்ப்பளிக்க வேண்டும். எனவே இளம் வீரர்களுக்கான வாய்ப்பை உறுதி செய்யும் விதமாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளதாகவும் இந்த முடிவால் தனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை என்றும் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரை தனக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருந்துவந்த தனது குடும்பம், பிசிசிஐ, உத்தர பிரதேச கிரிக்கெட் வாரியம் மற்றும் ராஜீவ் சுக்லா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார்.