அசத்தல் பெண்கள் !! ஆஸ்திரேலியாவை மண்ணை கவ்வ வைத்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்திய கிரிக்கெட் அணி!!!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இங்கிலாந்தில் நடக்கும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி டெர்பியில் நடைபெற்றது. இதில், இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர் கொண்டது. இப்போட்டி மழையால் தாமதமாகத் தொடங்கியதால் ஆட்டம் 42 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

 டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி மந்தனா, பூனம் ரவுத் ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள்.மந்தனா 6 ரன்னிலும், ரவுத் 14 ரன்னிலும் வெளியேறி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். அடுத்து கேப்டன் மிதாலி ராஜ் உடன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. அணியின் ஸ்கோர் 101 ரன்னாக இருக்கும்போது மிதாலி ராஜ் 36 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

மறுமுனையில் விளையாடிய கவுர் 64 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 90 பந்தில் சதம் அடித்தார்.

அதன்பின் கவுர் ஆட்டத்தில் அதிரடி காட்டினார். பந்தை சிக்சருக்கும் பவுண்டரிக்கும் என விரட்டினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 37-வது ஓவரை கார்ட்னெர் வீசினார். இந்த ஓவரில் தலா இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகள் விளாசினார். 38-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளும், 39-வது ஓவரில் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரி, 41-வது ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார்.

இவரது ஆட்டத்தால் இந்தியா 42 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் குவித்தது. ஹர்மன்ப்ரீத் 115 பந்தில் 20 பவுண்டரி, 7 சிக்சருடன் 171 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.பின்னர் 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேய வீராங்கணைகள் திணறினர். இதனால், முதல் 10 ஓவர்களுக்குள்ளாகவே 3 விக்கெட்டுகளை அந்த அணி இழந்து தடுமாறியது.

இருப்பினும் பெர்ரி மற்றும் வில்லானி ஆகிய வீராங்கணைகள் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இறுதிகட்டத்தில் இந்திய அணி சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை சிதறடித்தது. பெர்ரில் 38 ரன்களிலும், வில்லானி 75 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதி வரை போராடிய பிளாக்வெல் அதிகபட்சமாக 90 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். 41 வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்திய தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து, இந்தியா இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை சந்திக்க உள்ளது.