புதுடெல்லி,

சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் வெற்றிகரமாக ஜொலித்த இந்திய இணை ஜூவாலா கட்டா – அஸ்வினி ஜோடியாகும்.

இவர்கள் இருவரும் இணைந்து 2010–ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கமும், 2014–ம் ஆண்டு போட்டியில் வெள்ளிப்பதக்கமும், 2011–ம் ஆண்டு உலக போட்டியில் வெண்கலப்பதக்கமும், 2014–ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் களம் கண்ட ஜூவாலா கட்டா – அஸ்வினி ஜோடி ஒரு வெற்றி கூட பெறாமல் தொடக்க சுற்றிலேயே வெளியேறியது.

இதனை அடுத்து 33 வயதான ஜூவாலா கட்டா – 27 வயதான அஸ்வினி ஜோடி பிரிந்துள்ளது. இரட்டையர் பிரிவில் அஸ்வினி, 23 வயதான சிக்கி ரெட்டியுடன் ஜோடி சேருகிறார்.

இது குறித்து அஸ்வினி கருத்து தெரிவிக்கையில், “ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு நானும், ஜூவாலா கட்டாவும் ஆலோசனை நடத்தி இருவரும் தனித்தனி இணையுடன் ஆடுவது என்று முடிவு எடுத்தோம். ஜூவாலா கட்டாவுடன் இணைந்து விளையாடிய தருணங்கள் அருமையானதாகும். அவரிடம் இருந்து நிறைய நல்ல விஷயங்களை கற்று இருக்கிறேன். பிரிவு இருவருக்கும் நல்லது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்றுத் தெரிவித்தார்.