ஆஸ்திரேலிய பவுலர்கள் தான் எதிரணி பேட்ஸ்மேன்களை தங்களது வேகத்தில் மிரட்டி பார்த்திருப்போம். ஆனால் பும்ராவும் ஷமியும் ஆஸ்திரேலிய வீரர்களையே தங்களது வேகத்தில் மிரளவிட்டனர். பும்ராவும் ஷமியும் வீசிய பவுன்ஸர்களில் மிரண்டு போயினர் ஆஸ்திரேலிய வீரர்கள். இரண்டாவது இன்னிங்ஸில் 243 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இந்திய அணிக்கு 287 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் வென்று 2-0 என முன்னிலை வகிக்கும் முனைப்பில் இந்திய அணியும், இந்த போட்டியில் வென்று 1-1 என தொடரை சமன் செய்யும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் களம் கண்டன. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களும் இந்திய அணி 283 ரன்களும் எடுத்தன. 43 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஃபின்ச் - மார்கஸ் ஹாரிஸ் நிதானமாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி சிறப்பாக ஆடிவந்த நிலையில், ஷமி வீசிய பவுன்ஸரில் ஃபின்ச்சின் கையில் காயம் ஏற்பட்டு ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். 

இதைத்தொடர்ந்து மார்கஸ் ஹாரிஸ், ஷான் மார்ஷ், ஹேண்ட்ஸ்கம்ப், டிராவிஸ் ஹெட் ஆகிய நால்வரும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிதானமாக ஆடிய கவாஜாவுடன் கேப்டன் டிம் பெய்ன் ஜோடி சேர்ந்து அணியை மீட்டெடுத்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 72 ரன்களை சேர்த்தது. 

இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த இந்த ஜோடியை பிரித்து ஷமி பிரேக் கொடுத்தார். காயத்தால் ரிட்டயர்ட் ஹர்ட் ஆன ஃபின்ச், டிம் பெய்னின் விக்கெட்டுக்கு பிறகு களத்திற்கு வந்தார். அவரை முதல் பந்திலேயே வீழ்த்தி அனுப்பினார் ஷமி. அதன்பிறகு கவாஜா, கம்மின்ஸ், நாதன் லயன் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. 

192 ரன்னில் 5வது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலிய அணி 207 ரன்களுக்கே 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதில் நாதன் லயனின் விக்கெட் அவரை அச்சுறுத்தி வீழ்த்தப்பட்ட விக்கெட். இரண்டாவது இன்னிங்ஸில் இதற்கு முன்னர் வீசியதைவிட ஆக்ரோஷமாக வீசினர் இந்திய பவுலர்கள். நாதன் லயன் சிறப்பாக பேட்டிங் ஆடக்கூடியவர். அவருக்கு ஷமி வீசிய பவுன்ஸர் அவரது தலையை பதம்பார்த்தது. அவரது ஹெல்மெட்டில் அடித்ததால் நிலைகுலைந்தார் நாதன் லயன். அதற்கு அடுத்த பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். 

207 ரன்களுக்கே 9 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், கடைசி விக்கெட்டுக்கு ஸ்டார்க்கும் ஹேசில்வுட்டும் இணைந்து 36 ரன்களை சேர்த்தனர். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 243 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸை இழந்தது. ஏற்கனவே 43 ரன்கள் முன்னிலையில் இருந்ததால் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 287 ரன்களை நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி. 

இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா மற்றும் ஷமியின் பவுலிங் ஆஸ்திரேலிய வீரர்களை அச்சுறுத்தும் விதமாக அமைந்தது. ஷமியின் பவுன்ஸரின் ஃபின்ச் கையில் காயமடைந்தார். அதன்பிறகு மார்கஸ் ஹாரிஸின் மண்டையை பும்ரா பதம்பார்த்தார். அத்துடன் நிற்காமல், நாதன் லயனின் மண்டையையும் ஷமி பதம்பார்த்தார். தொடர்ச்சியாக ஷமி மற்றும் பும்ராவின் பவுன்ஸரில் மிரண்டுபோயினர் ஆஸ்திரேலிய வீரர்கள். பொதுவாக ஆஸ்திரேலிய பவுலர்கள்தான் தங்களது வேகத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டுவர். ஆனால் அவர்களையே மிரட்டிவிட்டனர் ஷமியும் பும்ராவும். இந்திய அணியின் சார்பில் ஷமி 6 விக்கெட்டுகளையும் பும்ரா 3 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

287 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது.