ஸ்விங் பவுலிங்கில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறுவதற்கு என்ன காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி ஆகிய மூவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். பெரும்பாலும் இவர்கள் மூவரையும் நம்பியே இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் உள்ளது. இவர்கள் எப்படி ஆடுகின்றனரோ அதற்கேற்றவாறே இந்திய அணியின் ஸ்கோர் அமையும்.

ரோஹித் - தவான் தொடக்க ஜோடி, உலகின் சிறந்த தொடக்க ஜோடியாக திகழ்ந்தாலும், சில நேரங்களில் சொதப்பிவிடுகின்றனர். எல்லா போட்டிகளிலுமே சிறப்பாக ஆட வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என்றாலும், எந்த மாதிரியான சூழல்களில் இவர்கள் சோபிப்பதில்லை என்பதை பார்க்க வேண்டியது அவசியம்.

ரோஹித் - தவான் ஆகிய இருவருமே பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகும்போது விரைவில் விக்கெட்டுகளை இழந்துவிடுகின்றனர். பிளாட்டான ஆடுகளங்களில் ஆடும்போது அடித்துக்கொண்டே இருப்பார்கள். அதே பந்து நன்றாக ஸ்விங் ஆனால் விக்கெட்டை இழந்துவிடுவார்கள். நியூசிலாந்துக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, நான்காவது மற்றும் நடந்துவரும் ஐந்தாவது போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்பியது. 

நான்காவது போட்டியில் பேட்ஸ்மேன்கள் யாருமே சோபிக்காத நிலையில், ஐந்தாவது போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்த போட்டிகளில் பந்துகள் ஸ்விங் ஆனதுதான் இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் சொதப்பியதற்கு காரணம். நான்காவது போட்டி நடந்த ஹாமில்டன் ஆடுகளத்தில் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆனது. அதை பயன்படுத்தி அபாரமாக ஸ்விங் செய்து வீசிய போல்ட், ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை சரித்தார். அதேபோல ஐந்தாவது போட்டி நடந்துவரும் வெலிங்டனிலும் பந்து ஸ்விங் ஆனதால் இந்திய வீரர்கள் முதல் நான்கு விக்கெட்டுகளை விரைவில் இழந்தனர். 

இந்நிலையில், இந்திய வீரர்கள் ஸ்விங் பவுலிங்கை ஆட திணறுவதற்கான காரணம் என்ன என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள பிரவீன் குமார், பிளாட்டான ஆடுகளங்களிலேயே அதிகமாக ஆடிப்பழகிய இந்திய வீரர்கள், ஸ்விங் பந்துகளில் ஆட திணறுகின்றனர். பிளாட்டான ஆடுகளங்களில் அதிகமாக ஆடும் இந்திய வீரர்கள், பந்துகள் ஸ்விங் ஆகும்போது அதற்கேற்றவாறு கால் நகர்த்தல்களை மாற்ற முடியாமல் திணறி விக்கெட்டுகளை இழந்துவிடுகின்றனர். இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆடுகளங்களில் ஆடும்போது இந்திய வீரர்கள், ஸ்விங் கண்டிஷனை நினைத்து பயப்படுகின்றனர் என்று பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.