Indian batsman Rohit Sharma improves in ICC World Twenty20 rankings
ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரோஹித் சர்மா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தலைமை வகித்த ரோஹித், பட்டியலில் முதல் முறையாக 800 புள்ளிகளை கடந்து 816 புள்ளிகளுடன் உள்ளார். இதற்கு முன்னர், மொஹாலியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் அவர் இரட்டைச் சதமடித்தபோது 825 புள்ளிகளை எட்டியிருந்தார்
இதேபோல, அந்தத் தொடரின் கடைசி ஆட்டத்தில் சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்த ஷிகர் தவன், ஒரு இடம் முன்னேறி 14-வது இடத்தை அடைந்துள்ளார்.
ஓய்வில் இருக்கும் வீராட் கோலி 876 புள்ளிகளுடன் பட்டியலின் முதலிடத்தில் தொடர்கிறார்.
ஐசிசியின் பந்துவீச்சாளர்களுக்கான வரிசையில் யுவேந்திர சாஹல் 23 இடங்கள் முன்னேறி 28-வது இடத்திற்கு வந்துள்ளார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் மொத்தமாக ஆறு விக்கெட்களை வீழ்த்தினார். இதில் கடைசி ஆட்டத்தில் மட்டும் அவர் மூன்று விக்கெட்களை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குல்தீப் யாதவ் 16 இடங்கள் முன்னேறி, முதல் முறையாக 56-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆல் ரௌண்டர் ஹார்திக் பாண்டியா பத்து இடங்கள் முன்னேறி 45-வது இடத்தை முதல் முறையாக பிடித்துள்ளார்.
இலங்கை அணியைப் பொருத்த வரையில், பேட்ஸ்மேன்கள் வரிசையில் உபுல் தரங்கா 15 இடங்கள் முன்னேறி 36-வது இடத்திற்கும், நிரோஷன் டிக்வெல்லா ஏழு இடங்கள் முன்னேறி 37-வது இடத்திற்கும் வந்துள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில் சுரங்கா லக்மல் 14 இடங்கள் முன்னேறி 22-வது இடத்தையும், ஆல் ரௌண்டர் ஏஞ்ஜெலோ மேத்யூஸ் ஒன்பது இடங்கள் முன்னேறி 47-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஒருநாள் போட்டி அணிகளுக்கான வரிசையில் இந்தியா 119 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடர்கிறது.
