இலங்கையில் நடந்துவரும் முத்தரப்பு டி20 தொடரில், இலங்கைக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றது.

இந்த போட்டியும் சரி.. இந்தியா பெற்ற வெற்றியும் சரி.. தரமானது அல்ல.. மிகவும் தரமற்ற போட்டியாகவும் இந்தியாவின் தரமற்ற வெற்றியாகவுமே இது அமைந்தது. 

பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் இரு அணிகளுமே மிகவும் மோசமாக விளையாடின. போட்டி என்றால் ஏதாவது ஒரு அணி வெற்றி பெற வேண்டும். அப்படியான ஒரு வெற்றிதான் இந்தியா பெற்றது. 

முதலில் வங்கதேசம் பேட்டிங் செய்தது. முதல் ஓவரிலேயே சரியான புரிதல் இன்றி, வாஷிங்டன் சுந்தரும் மனீஷ் பாண்டேவும் சேர்ந்து ஒரு கேட்சை தவறவிட்டனர். இந்த இடத்தில் இந்தியா பீல்டிங்கில் சொதப்பல்.

உனாட்கட் வீசிய மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தை சிக்ஸ் அடித்த சௌமியா சர்க்கார், அதேமாதிரியான பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன்பிறகு, வாஷிங்டன் சுந்தர் வீசிய நான்காவது ஓவரில் தமிம் இக்பால் கொடுத்த எளிமையான கேட்சை இந்திய கேப்டன் ரோஹித் தவறவிட்டார்.

ஷர்துல் தாகூரின் 5வது ஓவரில் மோசமான பந்தில் அவுட்டானார் தமிம் இக்பால். அது பவுலரின் திறமைக்கு கிடைத்த விக்கெட் என்பதைவிட பேட்ஸ்மேன் செய்த தவறால் கிடைத்த விக்கெட் என்றுதான் கூறவேண்டும்.

விஜய் சங்கர் வீசிய 7வது ஓவரின் மூன்றாவது பந்தில் தாஸ் கொடுத்த கேட்சை ரெய்னாவும் அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் தாஸ் மீண்டும் கொடுத்த கேட்சை வாஷிங்டன் சுந்தரும் தவறவிட்டனர்.

ஒரே ஓவரில் இரண்டு கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டு மிகவும் மோசமான ஃபீல்டிங்கை வெளிப்படுத்தினர் இந்திய வீரர்கள். இத்தனை கேட்ச் வாய்ப்புகள் கொடுத்தும் அதை பயன்படுத்தி கொள்ளாத தாஸ், விஜய் சங்கரின் பந்துவீச்சிலேயே அவுட்டாகி வெளியேறினார்.

இந்தியா பீல்டிங்கில் சொதப்பியது என்றால், வங்கதேச அணி பேட்டிங்கில் சொதப்பியது. தட்டு தடுமாறி இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தது.

எளிமையான இலக்கை விரட்டிய இந்திய அணி, வங்கதேசத்தை துவம்சம் செய்து வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வங்கதேசத்தின் மோசமான பந்துவீச்சை அடித்து நொறுக்கி வெற்றிக்கனியை விரைவில் பறிக்க தவறினர்.

மாறாக கொஞ்சம் அதிகமான ரன்களை எடுத்திருந்தால், நாம் வெற்றி பெற்றிருக்கலாமோ என வங்கதேச வீரர்கள் நினைக்கும் அளவிற்கு, 19வது ஓவரின் நான்காவது பந்துவரை போட்டியை இழுத்து சென்றனர். 19வது ஓவரில்தான் இந்திய அணி வெற்றி பெற்றது.

இவ்வாறு பேட்டிங், பவுலிங், பீல்டிங் அனைத்திலும் இரு அணிகளும் சொதப்பினர். அதில், அதிகமாக யார் சொதப்பினார்களோ அவர்கள் தோல்வியடைந்தனர் என கூறும் அளவில்தான் இந்தியாவின் வெற்றி அமைந்தது.