ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோலி இல்லாமல் ஆடிய இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்று ரஹானே தலைமையில் டெஸ்ட் தொடரை வென்று தூள் கிளப்பியுள்ளது.

இமாச்சலப் பிரதேச தலைநகர் தர்மசாலாவில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 88.3 ஓவர்களில் 300 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட்டானது.

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 111, மேத்யூ வேட் 57, டேவிட் வார்னர் 56 ஓட்டங்கள் சேர்த்தனர்.

இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

பின்னர், முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 118.1 ஓவர்களில் 332 ஓட்டங்களுக்கு அவுட்டானது.

கே.எல்.ராகுல் 60, புஜாரா 57, கேப்டன் ரஹானே 46 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினர். பின்னர் ஆடவந்த ஜடேஜா, 95 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியத் தரப்பில் நாதன் லயன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸில் 32 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா, 53.5 ஓவர்களில் 137 ஓட்டங்களுக்கு அவுட்டானது.

 இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ், ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதையடுத்து 106 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரரான கே.எல்.ராகுல், கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார்.

3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்கள் எடுத்தது.

கே.எல்.ராகுல் 13, முரளி விஜய் 6 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.

இன்று ஆட்டம் தொடங்கியபோது ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முரளி விஜய் தடுமாறினார். பிறகு 8 ஓட்டங்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த புஜாரா எதிர் பாராதவிதமாக ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

ரஹானே கம்மின்ஸின் ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் இரு சிக்ஸர்கள் அடித்தார். 

இந்திய அணி 23.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 107 ஓட்டங்கள் எடுத்து தர்மசாலா டெஸ்ட் போட்டியை வென்றது. மேலும், டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.

ராகுல் 52, ரஹானே 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தர்மசாலா டெஸ்டில் கோலி விளையாடத போதும், இந்திய அணி ரஹானேவின் தலைமையில் வெற்றியைத் தழுவியது.