இந்தியா ஏ - ஆஸ்திரேலியா இடையிலான மூன்று நாள் பயிற்சி கிரிக்கெட் ஆட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது.
ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்திய "ஏ' அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்களுக்கு இந்தப் போட்டி நல்ல வாய்ப்பாகும். அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்கும் ஒரே பயிற்சிப் போட்டி இதுதான்.
எனவே அந்த அணியினர் இந்தப் போட்டியை முடிந்த அளவுக்கு சிறப்பாக விளையாடுவர் என்று எதிர்ப்பார்க்கலாம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய சீனியர் அணியில் இடம்பெற்றுள்ள ஹார்திக் பாண்டியா, இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடுவதன் மூலம் ஆடும் லெவனில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
எனவே அவர் பேட்டிங், பெளலிங் இரண்டிலும் முடிந்த அளவுக்கு சிறப்பான பங்களிப்பை செய்ய முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் சதமடித்த பி.கே.பன்சால், இந்தப் போட்டியிலும் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் ரிஷப் பந்த், இஷன் கிஷான், ஆதித்ய தாரே, ஷ்ரேயஸ் ஐயர் உள்ளிட்டோரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர்.
பி.கே.பன்சால், ஷ்ரேயஸ் ஐயர் ஆகிய இருவரும் ரஞ்சி கிரிக்கெட் தொடரில் தலா 1,300 ரன்களுக்கு மேல் குவித்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகதப்பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேஸில்வுட் ஆகியோரை சில ஓவர்கள் பந்துவீச கேப்டன் ஸ்மித் அனுமதிக்கும் பட்சத்தில் அது இந்தியாவின் இளம் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.
வேகப்பந்து வீச்சில் அசோக் திண்டா, பாண்டியா தவிர, இளம் வீரர்களான நவ்தீப் சைனி, முகமது சிராஜ் ஆகியோரும் பலம் சேர்க்கின்றனர்.
சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், சபேஸ் நதீம் உள்ளிட்டோரை நம்பியுள்ளது இந்திய "ஏ' அணி.
ஆஸ்திரேலிய அணியினர் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக தங்களை தயார்படுத்திக் கொள்ள இந்த பயிற்சிப் போட்டி நல்ல வாய்ப்பாகும்.
அந்த அணி ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், மேத்யூ ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ், கிளன் மேக்ஸ்வெல் என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 23-ஆம் தேதி புணேவில் தொடங்குகிறது. அதை முன்னிட்டே இந்தப் பயிற்சி போட்டி நடைபெறுகிறது.
இந்தியா ஏ:
ஹார்திக் பாண்டியா (கேப்டன்), அகில் ஹெர்வாத்கர், பி.கே.பன்சால், ஷ்ரேயஸ் ஐயர், அங்கித் பவானே, ரிஷப் பந்த், இஷன் கிஷான் (விக்கெட் கீப்பர்), சபேஸ் நதீம், கிருஷ்ணப்பா கெளதம், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, அசோக் திண்டா, முகமது சிராஜ், ராகுல் சிங், பாபா இந்திரஜித்.
ஆஸ்திரேலியா:
ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், ஆஷ்டன் அகர், ஜாக்சன் பேர்ட், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், ஜோஷ் ஹேஸில்வுட், உஸ்மான் கவாஜா, நாதன் லயன், மிட்செல் மார்ஷ், ஷான் மார்ஷ், கிளன் மேக்ஸ்வெல், ஸ்டீபன் ஓ"கீப், மேத்யூ ரென்ஷா, மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், மேத்யூ வேட்.
இந்த அணிகள் மோதும், போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்து, ஆஸ்திரேலியாவை ஆட வைத்துள்ளது.
