இலங்கைக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 168 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றிப் பெற்றதன்மூலம் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இலங்கைக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் கேதார் ஜாதவ், புவனேஸ்வர் குமார் ஆகியோருக்குப் பதிலாக முறையே மணீஷ் பாண்டே, ஷர்துல் தாக்குர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் ஷிகர் தவன் 4 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ரோஹித் சர்மாவுடன் இணைந்தார் கேப்டன் விராட் கோலி.

ரோஹித் சர்மா ஆரம்பத்தில் நிதானம் காட்ட, மறுமுனையில் அதிரடியில் இறங்கிய கோலி 38 பந்துகளில் அரை சதமடிக்க, ரோஹித் சர்மா 45 பந்துகளில் அரை சதம் கண்டார். இதனால் 20.2 ஓவர்களில் 150 ரன்கள் எட்டியது இந்தியா. அதிரடியாக ஆடிய கோலி 76 பந்துகளில் சதமடித்தார். இதனால் 25.5 ஓவர்களில் 200 ஓட்டங்களை எட்டியது இந்தியா.

தொடர்ந்து வேகம் காட்டிய கோலி 96 பந்துகளில் 2 சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் 131 ஓட்டங்கள் குவித்து மலிங்கா பந்துவீச்சில் முனவீராவிடம் கேட்ச் ஆனார். 

இதையடுத்து ஹார்திக் பாண்டியா களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா 85 பந்துகளில் சதமடித்தார். மேத்யூஸ் வீசிய 35-வது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் பாண்டியா, ரோஹித் சர்மா ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

பாண்டியா 18 பந்துகளில் 19 ஓட்டங்கள் எடுத்தார். ரோஹித் சர்மா 88 பந்துகளில் 104 ஓட்டங்கள் குவித்தார்.  இதன்பிறகு கே.எல்.ராகுல் 7 ஓட்டங்களில் நடையைக் கட்ட, மணீஷ் பாண்டே-தோனி கூட்டணி கடைசிக் கட்டத்தில் அதிரடியாக ஆடியது.

இதனால் இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 375 ஓட்டங்கள் குவித்தது. பாண்டே 42 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள், தோனி 42 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இலங்கைத் தரப்பில் மேத்யூஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இலங்கை அணியில் டிக்வெல்லா 14 ஓட்டங்களில் நடையைக் கட்டினார். பின்னர் வந்தவர்களில் மேத்யூஸ் 80 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்கள், சிறிவர்த்தனா 39 ஓட்டங்கள், டி சில்வா 22 ஓட்டங்கள் எடுத்தனர்.

எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்ட, இலங்கை அணி 42.4 ஓவர்களில் 207 ஓட்டங்களுக்கு சுருண்டது. 

இந்தியத் தரப்பில் ஜஸ்பிரித் பூம்ரா, ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

கோலி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இவ்விரு அணிகள் இடையிலான கடைசி ஒரு நாள் ஆட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.