இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-ஆவது பயிற்சி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய "ஏ' அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிப் பெற்றது.

மும்பையில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் - அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5 ஓவர்களில் 42 ஓட்டங்கள் சேர்த்தனர்.

ஜேசன் ராய் 15 பந்துகளில் 25 ஓட்டங்கள் சேர்த்து வெளியேற, ஹேல்ஸுடன் இணைந்தார் ஜானி பேர்ஸ்டோவ். இந்த ஜோடி 2-ஆவது விக்கட்டுக்கு 74 ஓட்டங்கள் சேர்த்தனர். ஹேல்ஸ் 53 பந்துகளில் 51 ஓட்டங்கள் சேர்த்து வெளியேற, பின்னர் வந்த கேப்டன் மோர்கன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு பென் ஸ்டோக்ஸ் களமிறங்க, ஜானி பேர்ஸ்டோவ் 65 பந்துகளில் 64 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து ஜோஸ் பட்லர் ரன் ஏதுமின்றியும், மொயீன் அலி 1 ஓட்டத்திலும், கிறிஸ் வோக்ஸ் 16 ஓட்டங்களிலும், பென் ஸ்டோக்ஸ் 38 ஓட்டங்களிலும், பிளங்கெட் 8 ஓட்டங்களிலும் வெளியேற, 39 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து.

ஆனால் கடைசி விக்கெட்டுக்கு இணைந்த ஆதில் ரஷித் - டேவிட் வில்லே ஜோடி 71 ஓட்டங்கள் சேர்த்தது. இதனால் இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் 282 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆதில் ரஷித் 42 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்தார். டேவிட் வில்லே 30 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்தியத் தரப்பில் பர்வீஸ் ரசூல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய இந்திய அணியில் கேப்டன் அஜிங்க்ய ரஹானே - ஷெல்டன் ஜாக்சன் ஜோடி அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 18.5 ஓவர்களில் 119 ஓட்டங்கள் குவித்தது. 56 பந்துகளைச் சந்தித்த ஜாக்சன் 59 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களம் கண்ட ரிஷப் பந்த், இங்கிலாந்து பெளலர்களை விளாசினார். ஜேக் பால் பந்துவீச்சில் தொடர்ச்சியாக இரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசிய ரிஷப் பந்த் 32 பந்துகளில் அரை சதம் கண்டார். தொடர்ந்து வேகம் காட்டிய அவர் 36 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 59 ஓட்டங்கள் எடுத்தார்.

இதையடுத்து சுரேஷ் ரெய்னா களமிறங்க, மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 83 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 91 ஓட்டங்கள் எடுத்து வில்லே பந்துவீச்சில் போல்டு ஆனார்.

இதன்பிறகு ரெய்னா 34 பந்துகளில் 45 ஓட்டங்கள் சேர்த்து வெளியேற, 39.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 283 ஓட்டங்கள் எடுத்து வெற்றி கண்டது இந்தியா. தீபக் ஹூடா 23, இஷான் கிஷன் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இங்கிலாந்து தரப்பில் டேவிட் வில்லே, ஜேக் பால், ஆதில் ரஷித், மொயீன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.