இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கண்டது.

கடைசி நாளான திங்கள்கிழமை இங்கிலாந்து அணி எஞ்சிய 8 விக்கெட்டுகளையும் 71 ஓட்டங்களுக்கு இழந்து தோல்வியைத் தழுவியது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 129.4 ஓவர்களில் 455 ஓட்டங்கள் குவித்தது. கேப்டன் கோலி 167, புஜாரா 119, அஸ்வின் 58 ஓட்டங்கள் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், மொயீன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய இங்கிலாந்து அணி 102.5 ஓவர்களில் 255 ஓட்டங்களுக்கு சுருண்டது. பென் ஸ்டோக்ஸ் 70 ஓட்டங்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 200 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 63.1 ஓவர்களில் 204 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. கோலி 81 ஓட்டங்கள் குவித்தார். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், ஆதில் ரஷித் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதையடுத்து 405 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து அணி, வெற்றி பெறுவதற்கு சாத்தியமில்லை என்பதால் 4-ஆவது நாளில் தடுப்பாட்டம் ஆடியது.

அந்த அணியின் கேப்டன் குக்-ஹஸீப் ஹமீது ஜோடி 50.2 ஓவர்களில் 75 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தது. 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 59.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 87 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

கடைசி நாளான திங்கள்கிழமை 318 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ûஸ தொடர்ந்த இங்கிலாந்து அணி இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சரிந்தது. பென் டக்கெட் டக் அவுட்டாக, பின்னர் வந்த மொயீன் அலி 2, பென் ஸ்டோக்ஸ் 6 ஓட்டங்களில் நடையைக் கட்டினர்.

இதையடுத்து ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்க, மறுமுனையில் தடுப்பாட்டம் ஆடிய ஜோ ரூட் 25 ஓட்டங்களில் (107 பந்துகளில்) முகமது சமி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் வீழ்ந்தார். பின்னர் வந்த ஆதில் ரஷித் 4 ஓட்டங்களில் வெளியேற, மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 93 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி அடுத்த 16 ரன்களுக்கு எஞ்சிய விக்கெட்டுகளை இழந்தது. பேர்ஸ்டோவ் 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியத் தரப்பில் அஸ்வின், ஜெயந்த் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 248 ஓட்டங்களைக் குவித்த இந்திய கேப்டன் கோலி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்தியா. இவ்விரு அணிகள் இடையிலான 3-ஆவது டெஸ்ட் போட்டி வரும் சனிக்கிழமை மொஹாலியில் தொடங்குகிறது.