நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என வென்றுள்ளது. 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வென்றிருந்த நிலையில், மூன்றாவது போட்டி மவுண்ட் மாங்கனியில் இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

நியூசிலாந்து அணியின் முதல் 3 விக்கெட்டுகள் விரைவில் இழந்துவிட்டாலும், நான்காவது விக்கெட்டுக்கு டெய்லர் - டாம் லதாம் ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். இருவருமே அரைசதம் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். நான்காவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 118 ரன்களை சேர்த்தது. அரைசதம் அடித்த லதாம் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு மளமளவென சரிய, டெய்லரும் 93 ரன்களில் அவுட்டாகி சதத்தை தவறவிட்டார். அந்த அணியின் டெயிலெண்டர்கள் வரிசையாக அவுட்டாகினர். அதனால் அந்த அணி 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

244 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் தவானும் சிறப்பாக தொடங்கினர். தொடக்கம் முதலே அடித்து ஆடிய தவான், 6 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் அடித்த நிலையில், டிரெண்ட் போல்ட்டின் பந்தில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து ரோஹித்துடன் கோலி ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். அரைசதம் அடித்த ரோஹித் சர்மா, 62 ரன்களில் சாண்ட்னெரின் பந்தில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். இவரைத் தொடர்ந்து அரைசதம் அடித்த கேப்டன் கோலியும் 60 ரன்களில் போல்ட்டிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். 

ரோஹித், கோலியின் விக்கெட்டுக்கு பிறகு அவர்கள் விட்டுச்சென்ற பணியை செவ்வனே செய்தனர் ராயுடுவும் தினேஷ் கார்த்திக்கும். ராயுடு - தினேஷ் கார்த்திக் ஜோடி, நியூசிலாந்து பவுலர்களின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடினர். இருவருமே பவுண்டரிகளை விளாசினர். ராயுடு - தினேஷ் கார்த்திக்கின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி, 3 விக்கெட்டுகளுக்கு மேல் இழக்காமல் 43வது ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் 3-0 என ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றுள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. எனினும் முதல் 3 போட்டிகளில் தொடர்ந்து வென்று தொடரை வென்றுள்ளது இந்திய அணி. 2009ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்தில் 3-1 என ஒருநாள் தொடரை வென்றது. அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்து கோலி தலைமையிலான இந்திய அணி தொடரை வென்றுள்ளது.