நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. 

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சனை தவிர மற்ற எந்த வீரரும் சோபிக்கவில்லை. தொடக்க வீரர்கள் கப்டில் மற்றும் முன்ரோ ஆகிய இருவரையும் ஷமி தொடக்கத்திலேயே வீழ்த்தினார். பின்னர் டெய்லர் மற்றும் லதாம் ஆகிய இருவரையும் சாஹல் வீழ்த்தினார். 

ஹென்ரி நிகோல்ஸ், சாண்ட்னெர் என விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய வில்லியம்சன், அரைசதம் கடந்து ஆடிக்கொண்டிருந்தார். ஆனால் அவரை பெரிய இன்னிங்ஸ் ஆடவிடாமல் 64 ரன்களில் வீழ்த்தினார் குல்தீப். அணியின் ஸ்கோர் 146 இருந்தபோது வில்லியம்சன் 7வது விக்கெட்டாக அவுட்டானார். அதற்கடுத்த 9 ரன்களில் எஞ்சிய 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திவிட்டார் குல்தீப். அந்த அணி 38 ஓவர்களில் வெறும் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

158 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கோலியும் தவானும் இணைந்து நிதானமாகவும் அதேநேரத்தில் சீரான வேகத்திலும் ரன்களை சேர்த்தனர். அரைசதத்தை தவறவிட்ட விராட் கோலி, 45 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய தவான், அரைசதத்தை கடந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற செய்தார். 35வது ஓவரில் இலக்கை எட்டி இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தவான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். 

ஆட்டநாயகனாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியை அடுத்து, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.