பத்தொன்பதாவது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்கள் கிடைக்கும் என்று இந்தியாவின் தொழில்முறை குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

பத்தொன்பதாவது உலக குத்துச்சண்டை சாம்பியஷிப் போட்டி வரும் 25-ஆம் தேதி ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் தொடங்குகிறது.

இதில் இந்தியாவின் சார்பில் விகாஸ் கிருஷ்ணன் 75 கிலோ எடைப் பிரிவிலும், சிவ தாபா 60 கிலோ எடைப் பிரிவிலும், மனோஜ் குமார் 69 கிலோ எடைப் பிரிவிலும், அமித் பங்கால் 49 கிலோ எடைப் பிரிவிலும், கவீந்தர் பிஷ்த் 52 கிலோ எடைப் பிரிவிலும், கெளரவ் பிதூரி 56 கிலோ எடைப் பிரிவிலும், சுமித் சங்வான் 91 கிலோ எடைப் பிரிவிலும், சதீஷ் குமார் 91 கிலோ எடைப் பிரிவிலும் மேல் ஆகிய எட்டு பேர் அணி பங்கேற்கிறது.

இந்த நிலையில், இதுகுறித்து விஜேந்தர் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

“இந்த உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் இந்திய அணியில் முதிர்ச்சியான வீரர்கள் உள்ளனர். சிவ தாபா, விகாஸ் கிருஷ்ணன், மனோஜ் குமார் ஆகியோருடன் இணைந்து ஏற்கெனவே விளையாடியுள்ளதால், அவர்களைப் பற்றி அறிவேன்.

இந்தியாவுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்கள் வென்று தரும் திறமை அவர்களுக்கு உள்ளது. இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்கும்போது எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும். அதை அவர்களும் உணர்வார்கள்.

ஆனால், அவற்றை மனதுக்கு ஏற்றிக் கொள்ளக் கூடாது. அனைத்தையும் மறந்து, போட்டியிலும், களத்திலும் மட்டுமே முழு கவனம் இருக்க வேண்டும்.

விகாஸ் கிருஷ்ணனின் வளர்ச்சி என்னை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அவர் மிகச் சிறப்பாக ஆடி வருகிறார்” என்று அவர் கூறினார்.