வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி பரபரப்பான கடைசி ஓவரில் திரில்லாக டிராவில் முடிந்தது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, கோலி மற்றும் ராயுடுவின் சிறப்பான ஆட்டத்தால் 322 ரன்களை குவித்தது. தொடக்க வீரர்கள் ரோஹித் 4 ரன்களிலும் தவான் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 40 ரன்களுக்கே முதலிரண்டு விக்கெட்டுகளை இந்திய அணி இழந்துவிட்ட நிலையில், கோலி-ராயுடு ஜோடி சிறப்பாக ஆடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தது.

இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 139 ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய ராயுடு 73 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து தோனி, ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோர் ஒருபுறம் மளமளவென விக்கெட்டுகளை இழந்தாலும் கோலி மட்டும் நிலைத்து நின்றார். சிறப்பாக ஆடி சதமடித்த கோலி, சதம் கடந்த பிறகு கடைசி மூன்று ஓவர்களில் சிக்ஸர்களாக விளாசி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கடைசி நேரத்தில் கோலியின் அதிரடியால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 321 ரன்களை குவித்தது. கோலி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 157 ரன்களை குவித்தார்.

இதையடுத்து 322 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே அடித்து ஆட தொடங்கியது. எனினும் பவல் 18 ரன்களிலும் ஹேம்ராஜ் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அந்த அணியின் அனுபவ வீரர் சாமுவேல்ஸ் 13 ரன்களில் குல்தீப்பின் பந்தில் கிளீன் போல்டானார்.

இதையடுத்து அந்த அணியின் இளம் வீரர் ஹெட்மயர், ஷாய் ஹோப்புடன் ஜோடி சேர்ந்தார். கடந்த போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்து சதம் விளாசிய ஹெட்மயர், இந்த போட்டியிலும் களமிறங்கியது முதலே அதிரடியாக ஆட தொடங்கினார். ஜடேஜா, சாஹல் ஆகியோர் ஸ்பின் பவுலிங்கை சிக்ஸர்களாக விளாசி மிரட்டினார். அதிரடியாக ஆடி, போட்டியின் போக்கையே மொத்தமாக மாற்றினார். இந்தியாவிடம் இருந்து போட்டியை பறித்தார். 64 பந்துகளுக்கு 94 ரன்கள் குவித்த ஹெட்மயர், சாஹலின் பந்தில் ஆட்டமிழந்து, சதத்தை தவறவிட்டார்.

ஹெட்மயரின் விக்கெட்டுக்கு பிறகு ஹோப்புடன் ஜோடி சேர்ந்த ரோமன் பவல் 18 ரன்களில் ஆட்டமிழக்க, ஹோப்புடன் கேப்டன் ஹோல்டர் ஜோடி சேர்ந்தார். ஹோல்டர் சிங்கிள் தட்டி கொடுக்க சிறப்பாக ஆடிய ஹோப் சதமடித்தார். ஒருநாள் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்த ஹோப், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒரே ஹோப்பாக இருந்தார். 

ஹோல்டர் ரன் அவுட்டாக, மொத்த பாரமும் ஹோப் மீது இறங்கியது. அதுவரை ஆதிக்கம் செலுத்தி வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி மீது அதன்பிறகு இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஜடேஜா, சாஹல் ஆகியோர் கடைசிகட்ட ஓவர்களை சிறப்பாக வீசினர். இதையடுத்து போட்டி உச்சகட்ட பரபரப்பை எட்டியது. 

கடைசி இரண்டு ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 49வது ஓவரை ஷமி வீசினார். அந்த ஓவரை அருமையாக வீசி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதையடுத்து கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. உமேஷ் யாதவ் கடைசி ஓவரை வீசினார். கடைசி ஓவரின் முதல் நான்கு பந்துகளில் 7 ரன்கள் எடுக்கப்பட்டதோடு நர்ஸ் அவுட்டானார். இதையடுத்து கடைசி இரண்டு பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது. 5வது பந்தில் ஹோப் இரண்டு ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்பதால் சிக்ஸர் விளாச வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஹோப் பவுண்டரி விளாசினார். இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது.