India Vs south Africa one day cricket India won by 124 runs

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுள்ளது. தென் ஆப்ரிக்கா தனது சொந்த மண்ணில் மீண்டும் மண்ணைக் கவ்வியுள்ளது,

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. டர்பன், செஞ்சூரியனில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் முறையே இந்தியா 6 விக்கெட் மற்றும் 9 விக்கெட் வித்தியாசங்களில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுன் நியூலாண்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று பகல்-இரவு போட்டியாக நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. துவக்க வீரர் ரோஹித் சர்மா டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். பின் இணைந்த தவான், கோலி இணை, அதிரடி ஆட்டம் ஆடி ரன் ரேட்டை உயர்த்தியது. 



தவான் 76 ரன்னிலும், ரஹானே 11 ரன்னிலும் டுமினி சுழலில் சிக்கினர். ஒரு சிக்சர் அடித்த பாண்ட்யா 14 ரன்னில் பெவிலியன் திரும்பினார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் தூணாக நின்ற கேப்டன் கோலி அசத்தல் சதமடித்தார். தொடர்ந்து இறுதிவரை விளையாடி 160 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இத்தொடரில் கோலி அடிக்கும் 2வது சதம் இது.



இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது. 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களத்தில் இறங்கியது.

இந்தியாவின் கடின இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்க அணி வழக்கம் போல சகால், குல்தீப் ஆகியோரின் சுழலை சமாளிக்க முடியாமல் தத்தளித்தது. அந்த அணியில் டுமினி மட்டும் 51 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார்.

தொடர்ந்து மளமளவென தென் ஆப்ரிக்க விக்கெட்டுகள் சரிந்தன. இறுதியில் தென் ஆப்ரிக்க அணி, 40 ஓவரில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து இந்திய அணி வரலாறு படைத்துள்ளது.