India vs south Africa 3 rd one day cricket Kohkli 160 runs
கேப் டவுனில் நடைபெற்று வரும் 3 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போடியில் தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய வீரர்கள் 304 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 160 ரன்கள் குவித்து ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தினார்.
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. டர்பன், செஞ்சூரியனில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் முறையே இந்தியா 6 விக்கெட் மற்றும் 9 விக்கெட் வித்தியாசங்களில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுன் நியூலாண்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று பகல்-இரவு போட்டியாக நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் பேட்டிங் ரோகித் ஷர்மா ரன் எடுக்காமல் முதல் ஓவரில் அவுட் ஆனதால் மோசமான நிலையில் தொடங்கியது.
இதையடுத்து ஷிகர் தவானுடன், விராட் கோலி களமிறங்கினார். இருவரும் இந்திய அணிக்கு அடித்தளத்தையும், ரன்சேர்ப்பதையும் நேர்த்தியான முறையில் முன்னெடுத்து சென்றார்கள். இக்கூட்டணி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை பதம் பார்த்தது. ஷிகர் தவான் அரை சதம் கடந்து விளையாடிய நிலையில் இந்திய அணிக்கு 23.1வது ஓவரில் இரண்டாவது விக்கெட் விழுந்தது.

நேர்த்தியாகவும், விறுவிறுப்பாகவும் சென்ற ஆட்டத்தில் சோர்வாக ஷிகர் தவான் டுமினி பந்துவீச்சில் ஷாட் அடித்து கேட்ச் கொடுத்து 76 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து கேப்டன் விராட் கோலி மட்டும் ஸ்திரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
விராட் கோலியுடன் கைகோர்த்த ரெகானே 11 ரன்களில் அவுட் ஆனார். ஹர்திக் பாண்டியா ஒரு சிக்சர் அடித்து அசத்தினார். ஆனால் நிலைக்கவில்லை, 14 ரன்களில் அவுட் ஆனார். 39.1 வது ஓவரில் விராட் கோலி டுமினி பந்துவீச்சை எதிர்க்கொண்டு இரண்டு ரன்கள் எடுத்து சதத்தை பூர்த்தி செய்தார். விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அடித்த 34வது சதமாகும்.
டோனி 10 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். கேதர் ஜாதவ் ஒரு ரன்னில் அவுட் ஆனார். விராட் கோலி தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் வெற்றியை தனதாக்கும் முயற்சியில் ஸ்திரம் காட்டினார். தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை பதம் பார்த்த அவர் 49.1 வது ஓவரில் 150 ரன்களை அடித்தார்.

அவருக்கு துணையாக புவனேஷ்வர் குமார் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்காவிற்கு 304 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்து உள்ளது.
விராட் கோலி கடைசி ஓவரில் கடைசி இரண்டு பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி என அபாரம் காட்டி ரசிகர்களை மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க செய்தார்.. இறுதியாக விராட் கோலி 160 ரன்களுடனும், புவனேஷ்வர் குமார் 16 ரன்களுடனும் களத்தில் நின்றனர். தொடர்ந்து தேன் ஆப்பிரிக்கா தற்போது விளையாடி வருகிறது.
