இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்குகிறது. 

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணியின் சொதப்பலான பேட்டிங் தான் தோல்விக்கு காரணம். அதிலும் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. 

இந்த படுதோல்வியால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அணி தேர்வு குறித்து கேப்டன் விராட் கோலியும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. 

எனவே இன்று தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. டிராவாவது செய்ய வேண்டும். இல்லையெனில் இங்கிலாந்து அணி தொடரை வென்றுவிடும். 

வெற்றி கட்டாயத்தில் களமிறங்கும் இந்திய அணிக்கு, காயத்திலிருந்து மீண்ட வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆடுவது கூடுதல் பலம். எனினும் முதுகு வலியால் பாதிக்கப்பட்டிருந்த கேப்டன் விராட் கோலி, இந்த போட்டியில் ஆடுவாரா என்ற சந்தேகம் இருந்து வந்தது. ஆனால் அவர் பயிற்சிகளில் ஈடுபட்டார். அதனால் ஆடுவார் என்பது தெரியவந்தது. 

இந்நிலையில், இந்த போட்டி குறித்து பேசிய விராட் கோலி, முதுகுவலியிலிருந்து தான் குணமாகிவிட்டதால் கண்டிப்பாக மூன்றாவது போட்டியில் ஆடுவதாக தெரிவித்தார். மேலும் இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து ஆடி ரன்களை குவிப்பார்கள் என நம்புவதாகவும் பும்ராவின் வருகை அணிக்கு உற்சாகத்தை அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.