ஐ.எஸ்.எஸ்.எஃப் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவருக்கான டிராப் பிரிவில் இந்தியாவின் விவான் கபூர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

ஐ.எஸ்.எஸ்.எஃப் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெறுகிறது. 

இப்போட்டியில், டிராப் இறுதிச்சுற்றில் மொத்தம் பறக்கவிடப்பட்ட 40 களிமண் தட்டுகளில் விவான் 30 தட்டுகளை சுட்டுத் தள்ளி 3-ஆம் இடம் பிடித்தார். 

இப்பிரிவில் இத்தாலியின் மேட்டியோ மரோங்கியு தங்கமும், சீனாவின் யிலியு ஒளயாங் வெள்ளியும் வென்றனர்.

இதேபிரிவில் போட்டியிட்ட இதர இந்தியர்களான லக்ஷய் மற்றும் அலி அமன் இலாஹி, தகுதிச்சுற்றில் முறையே 8 மற்றும் 13-ஆம் இடங்களைப் பிடித்தனர்.

 ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் விவான் பங்கேற்பது இது 2-வது முறையாகும். முன்னதாக இத்தாலியின் போர்பெட்டோ நகரில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றிருந்த விவான், அதில் 18-வதாக வந்திருந்தார். அதன்படி பார்த்தால் இது இவரின் முன்னேற்றமே.

இதேபோல, அணிகளுக்கான டிராப் பிரிவிலும் விவான் (113), லக்ஷய் (112), அலி அமன் (103) ஆகியோர் கொண்ட இந்திய அணி 328 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றது. 

இந்தப் பிரிவில் சீனா 335 புள்ளிகளுடன் முதலிடமும், ஆஸ்திரேலியா 331 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும் பிடித்தன. 

இப்போட்டியில் இந்தியா இதுவரை 2 தங்கம், 3 வெண்கலம் என 5 பதக்கங்களுடன், பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. சீனா 5 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.