India tops ICC rankings list

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்து, முதலிடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்காவை இரண்டாம் இடத்துக்கு தள்ளியது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியதால் 122 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியது. அதேநேரம், முதலிடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. அந்த அணி 118 புள்ளிகளுடன் உள்ளது.

செஞ்சுரியனில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள 6-வது மற்றும் கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறும்பட்சத்தில் இந்தியா ஒரு புள்ளியை இழக்க நேரிடும். இருப்பினும், முதலிடத்தில் அந்த அணி நீடிக்கும்.

அதே சமயம், கடைசி ஆட்டத்தில் ஜெயித்து 5-1 என்ற கணக்கில் இந்தியா தொடரைக் கைப்பற்றினால், மேலும் ஒரு புள்ளியை கூடுதலாகப் பெற்று 123 புள்ளிகளுடன் முதலிடத்திலேயே நீடிக்கும்.

இந்தப் பட்டியல் வரிசையில், 116 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இங்கிலாந்தும், 115 புள்ளிகளுடன் அதற்கு அடுத்த இடத்தில் நியூஸிலாந்தும் உள்ளன.

5-வது இடத்தில் ஆஸ்திரேலியா, 6-வது இடத்தில் பாகிஸ்தான், 7-வது இடத்தில் வங்கதேசம், 8-வது இடத்தில் இலங்கை, 9-வது இடத்தில் மே.இ.தீவுகள்,10-வது இடத்தில் ஆப்கன் உள்ளது.

ஷார்ஜாவில் ஜிம்பாப்வே - ஆப்கானிஸ்தான் இடையே 5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்திலும், மூன்றாவது ஆட்டத்திலும் ஆப்கன் வெற்றி பெற்றது.

இதையடுத்து, தரவரிசையில் 11-வது இடத்தில் இருந்து 10-வது இடத்துக்கு ஆப்கன் முன்னேறியுள்ளது என்பது கொசுறு தகவல்.