India to lift Sri Lanka and saddle it on their own soil The two teams are equal ...

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் 141 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சொந்த மண்னில் கெத்து காட்டியுள்ளது இந்தியா.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் ஆட்டம் பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில், டாஸ் வென்று முதலில் பந்து வீசத் தீர்மானித்தது இலங்கை அணி.

ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்தியா 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 392 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர், 393 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 251 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித்தும், தவனும் களம் இறங்கினர். தவன் நிதானமாக ஆடி ஒரு புறம் அரை சதம் கடக்க மறுமுனையில் ரோஹித் தோள் கொடுத்தார்.

அணியின் ஸ்கோர் 115 எட்டியிருந்தபோது இந்த கூட்டணி பிரிந்தது. பதிரனா வீசிய பந்தில் திரிமானியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் தவன்.

அடுத்ததாக களம் கண்ட ஸ்ரேயஸ் ஐயர் அசத்தலாக விளையாடி அணியின் ஸ்கோரை ரோஹித்துடன் இணைந்து உயர்த்தினார். ரோஹித் சதத்தை கடந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு கொண்டிருக்க, ஒரு நாள் போட்டியில் தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார் ஸ்ரேயஸ்.

இரு வீரர்களும் இணைந்து மொத்தம் 213 ஓட்டங்கள் குவித்தனர். இதன்மூலம், நீண்ட நேரம் களத்தில் நின்ற ஜோடி என்ற பட்டியலில் இவர்களும் இடம்பெற்றனர்.

இந்தியா 45.3-ஆவது ஓவரில் 328 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது பெரேரா வீசிய பந்தில் டி சில்வாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார் ஸ்ரேயஸ். இதையடுத்து, களம் இறங்கிய தோனி 7 ஓட்டங்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

இதில், 2.3 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில், ரோஹித்துடன் களம் கண்டார் பாண்டியா. கடைசி ஓவரில் தனது 3-வது இரட்டை சதத்தை ரோஹித் பதிவு செய்ய, அந்த ஓவரின் கடைசி பந்தில் திரிமானியிடம் கேட்ச் ஆனார் பாண்டியா. இவ்வாறாக அணி மொத்தம் 392 ஓட்டங்கள் குவித்தது.

இதையடுத்து, களம் இறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் உபுல் தரங்கா 7 ஓட்டங்கள், குணதிலகா 16 ஓட்டங்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டாக களம் கண்ட திரிமானி, வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மாத்யூஸ் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அணியின் ஸ்கோர் 115-ஆக இருந்தபோது டிக்வெல்லா, சாஹல் பந்துவீச்சில் வாஷிங்டனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

குணரத்னே 34 ஓட்டங்கள், கேப்டன் பெரேரா 5 ஓட்டங்கள், பதிரனா 2 ஓட்டங்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அணி 207 ஓட்டங்கள் எடுத்து இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது பும்ரா பந்துவீச்சில் அகிலா தனஞ்ஜெயா ஆட்டமிழந்தார்.

மாத்யூஸ் சதம் காண அவருடன் லக்மல் களத்தில் இருந்தார். 50 ஓவர் முடிவில் அந்த அணி 251 ஓட்டங்களை எடுத்திருந்தது. அதிகபட்சமாக சாஹல் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

மூன்று ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகிக்கிறது.

கடைசி ஒரு நாள் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.