2018ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் இந்திய அணிக்கு மிகச்சிறப்பானதாக இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக இருந்தும் வெளிநாடுகளில் இந்திய அணியின் தோல்வி தொடர்ந்து கொண்டே இருந்தது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடர்களை இழந்தது.

2017ம் ஆண்டின் இறுதியில் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. எனினும் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இழந்தது. ஆண்டின் தொடக்கமே இந்திய அணிக்கு டெஸ்ட் தொடர் தோல்வியாக அமைந்தது. 

அதன்பிறகு ஜூன் மாதம் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக பெங்களூருவில் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அந்த போட்டிதான் ஆஃப்கானிஸ்தானுக்கு அணிக்கு முதல் டெஸ்ட் போட்டி.

அதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணியின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என இழந்தது. இந்திய அணியின் சோகம் தொடர்ந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வியை தொடர்ந்து இங்கிலாந்திலும் தொடரை இழந்தது, கோலியின் கேப்டன்சி மீதும் இந்திய டெஸ்ட் அணி மீதும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்திய அணி, சொந்த மண்ணில் புலி, அந்நிய மண்ணில் எலி என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது.

அதற்கேற்றாற்போலவே இங்கிலாந்தில் சவுக்கடி வாங்கிய இந்திய அணி, இந்தியாவிற்கு வந்த வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்று தொடரை வென்றது. 

அதற்கடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது இந்திய அணி. ஆஸ்திரேலியாவில் இதுவரை டெஸ்ட் தொடரை ஒருமுறை கூட வென்றிராத இந்திய அணியின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்தில் தொடரை இழந்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் வென்று தாங்கள் நம்பர் 1 அணிதான் என்று நிரூபிக்கும் என்ற எதிர்பார்ப்பு இந்திய அணியின் பொறுப்பை மேலும் அதிகரித்தது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய சாதகமாக இருக்கும் என்றும் அதனால் இந்திய அணி இந்த முறை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வெற்றியுடன் தொடங்கியது. ஆனால் பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 146 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. 

இதையடுத்து தொடரை வெல்வதற்கான வாய்ப்பை தக்கவைக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் மெல்போர்னில் நடந்த மூன்றாவது போட்டியை எதிர்கொண்டது. மெல்போர்ன் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, 37 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியை மெல்போர்னில் வீழ்த்தி சாதனை படைத்தது. 

இந்த ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான பும்ரா, அறிமுக ஆண்டிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மெல்போர்ன் டெஸ்டிலும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்ததோடு ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 

2018ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி கேப்டவுனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் தோற்று, தோல்வியுடன் ஆண்டை தொடங்கிய  இந்திய அணி, டிசம்பர் 30ம் தேதி(இன்று) மெல்போர்னில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியுடன் ஆண்டை முடித்துள்ளது.