india srilanka last test match tomorrow start in delhi

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நாளை தொடங்குகிறது. இப்போட்டியில் வென்று தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் தொடர்களை வென்ற நாடு என்ற புதிய சாதனையை படைக்க இந்திய வீரர்கள் துடிப்பாக உள்ளனர்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 2 போட்டிகளில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாளை டெல்லியில் தொடங்குகிறது.

இந்திய அணி கடந்த 2015-ம் ஆண்டு முதல் இதுவரை 8 டெஸ்ட் தொடர்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2015-ல் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என இந்திய அணி வென்றது. அதன்பிறகு, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இன்டீஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இலங்கை என அனைத்து டெஸ்ட் தொடரையும் வென்றுள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் வெற்றி பெற்றால், அது இந்திய அணி தொடர்ந்து வெல்லும் 9-வது டெஸ்ட் தொடராக இருக்கும். உலக அரங்கில் இதுவரை ஆஸ்திரேலிய அணி மட்டுமே தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களில் வென்று சாதனை படைத்துள்ளது. எனவே இந்திய அணி வீரர்கள் இந்த தொடரையும் கைப்பற்றி, ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்ய வேண்டும் என்பதில் துடிப்பாக உள்ளனர்.

தென் ஆப்பிரிக்க தொடரை கருத்தில் கொண்டு, இப்போட்டிக்கான ஆடுகளத்தை வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்க, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆடுகளத்தைப் பயன்படுத்தி இந்திய வேகப்பந்து வீச்சை வலுவாக்கவும் விராட் கோலி திட்டமிட்டுள்ளார்.