India should play very hard to defeat South Africa - Gautam Gambhir Advis ...
தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்த இந்தியா மிகக் கடினமாக விளையாட வேண்டியிருக்கும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் அறிவுரை வழங்கினார்.
2018 ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்தியா, அதையடுத்து இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு விளையாட உள்ளது.
இந்திய சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அந்தச் சூழல் ஆடுகளங்கள் சாதகமானதாக இருக்காது. இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் அந்தக் களங்கள் சோதனை மிகுந்ததாக இருக்கும்.
32 போட்டிகளில் 20 வெற்றிகளை பெற்றுள்ள கோலி தலைமையிலான படை, தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட அந்நிய மண்ணிலும் சாதிக்க வேண்டியுள்ளது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது:
"தென் ஆப்பிரிக்க அணி தனது சொந்த மண்ணில் பலம் வாய்ந்த ஒன்றாக இருப்பதால், அதனுடனான கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு அதிக சவால் அளிக்கக் கூடியதாக இருக்கும். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்படும் அந்த அணியை வீழ்த்த, இந்தியா மிகக் கடினமாக விளையாட வேண்டியிருக்கும்.
கடந்த இரு ஆண்டுகளாக சொந்த மண்ணில் விளையாடியுள்ள போட்டிகளில் இருந்து இந்திய அணிக்கு போதிய நம்பிக்கை கிடைத்திருக்கும் என நம்புகிறேன். சொந்த மண்ணில் அதிகம் விளையாடிய அனுபவம் இருந்தாலும், தென் ஆப்பிரிக்காவுக்கு மிகுந்த கவனத்துடனும், தன்னம்பிக்கையுடனும் இந்திய அணி செல்ல வேண்டும்.
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, எந்தவிதமான களச் சூழலிலும் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் சொந்த மண்ணைப் போல, அந்நிய மண்ணிலும் இந்தியா சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.
