நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அந்த அணிக்கு 325 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் தவான் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 154 ரன்களை குவித்தனர். இருவருமே அரைசதம் கடந்து அருமையாக ஆடிவந்த நிலையில் தவானை 66 ரன்களில் டிரெண்ட் போல்ட் வெளியேற்றினார். 

இதையடுத்து ரோஹித் சர்மாவுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். சதத்தை நெருங்கிய ரோஹித் சர்மா, 87 ரன்களில் ஃபெர்குசனின் ஸ்லோ டெலிவரியில் விக்கெட்டை பறிகொடுத்து சதத்தை தவறவிட்டார். அதன்பிறகு கேப்டன் கோலியுடன் ராயுடு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ரன் வேகத்தை குறைக்காமல் பார்த்துக்கொண்டது. இருவருமே சீரான வேகத்தில் ரன்களை சேர்த்துவந்த நிலையில், டிரெண்ட் போல்ட்டின் பவுன்ஸரில் 43 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார் கோலி.

பின்னர் ராயுடுவுடன் தோனி ஜோடி சேர்ந்தார். ஆஸ்திரேலிய தொடரில் ஃபார்முக்கு வந்த தோனி, இப்போதெல்லாம் களத்தில் நிலைப்பதற்கு பந்துகளை அதிகம் எடுத்துக்கொள்வதில்லை. இந்த போட்டியில் களத்திற்கு வந்தது முதலே பவுண்டரிகளை அடித்து ரன்களை சேர்க்க ஆரம்பித்தார். 

எனினும் போல்ட், ஃபெர்குசன், கோலின் டி கிராண்ட்ஹோம் ஆகியோர் கடைசி ஓவர்களை மெதுவாக வீசி, இந்திய பேட்ஸ்மேன்களை ரன் குவிக்க விடாமல் நெருக்கடி கொடுத்தனர். அப்படியும் தோனியும் ராயுடுவும் போராடி அவ்வப்போது சில பவுண்டரிகளை அடித்தனர். ஆனால் ரோஹித்தும் தவானும் அமைத்துக்கொடுத்த தொடக்கத்திற்கு இமாலய ஸ்கோரை எட்டியிருக்க வேண்டும். ஆனால் அப்படி இமாலய ஸ்கோரை எட்டவிடாமல் பார்த்துக்கொண்டனர் நியூசிலாந்து பவுலர்கள்.

எனினும் ஃபெர்குசன் வீசிய கடைசி ஓவரில் 21 ரன்கள் குவிக்கப்பட்டன. 49 ஓவர் முடிவில் இந்திய அணி 303 ரன்களை எடுத்திருந்தது. ஃபெர்குசன் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி, இரண்டாவது பந்தில் சிக்ஸர் மற்றும் மூன்றாவது பந்தில் மற்றொரு பவுண்டரி என அடித்து மிரட்டினார் கேதர் ஜாதவ். கேதர் நான்காவது பந்தில் சிங்கிள் தட்ட, ஐந்தாவது பந்தில் தோனி பவுண்டரி அடித்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டன. ஒருவழியாக கடைசி ஓவரில் 21 ரன்களை குவித்து 324 ரன்களுடன் இன்னிங்ஸை முடித்தது இந்திய அணி. 

தோனி கடைசி பந்தில் பவுண்டரி அடித்திருந்தால் அரைசதம் அடித்திருப்பார். ஆனால் 2 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 48 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேதர் ஜாதவ் 10 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவில்லை.