இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 129.4 ஓவர்களில் 455 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 49 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 103 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இதனால் அந்த அணி பாலோ-ஆன் பிடியில் சிக்கியுள்ளது. பாலோ ஆனை தவிர்க்க இன்னும் 153 ஓட்டங்கள் எடுக்க வேண்டியுள்ளது.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் புஜாரா, விராட் கோலி ஆகியோர் சதமடித்தனர். இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 317 ஓட்டங்கள் குவித்திருந்தது இந்தியா. கேப்டன் கோலி 151, அஸ்வின் 1 ஓட்டத்துடன் களத்தில் இருந்தனர்.
2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 351 ஓட்டங்களை எட்டியபோது கோலியின் விக்கெட்டை இழந்தது. 267 பந்துகளைச் சந்தித்த கோலி 18 பவுண்டரிகளுடன் 167 ஓட்டங்கள் குவித்து அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ரித்திமான் சாஹா 3 ஓட்டங்களிலும், ஜடேஜா ஓட்டங்கள் ஏதுமின்றியும் வெளியேற, 363 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. இதையடுத்து 8-ஆவது விக்கெட்டுக்கு அஸ்வினுடன் இணைந்தார் அறிமுக வீரர் ஜெயந்த் யாதவ். இந்த ஜோடி சிறப்பாக ஆட, இந்தியா 400 ஓட்டங்களைக் கடந்தது.
அசத்தலாக ஆடிய அஸ்வின் 86 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். அவர் 95 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 58 ஓட்டங்கள் சேர்த்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆனார். அஸ்வின்-ஜெயந்த் யாதவ் ஜோடி 64 ஓட்டங்கள் சேர்த்தது.
இதையடுத்து உமேஷ் யாதவ் களமிறங்க, ஜெயந்த் யாதவ் 35 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சமி ஒரு சிக்ஸரை விளாசி ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தினார்.
ஆனால் மறுமுனையில் நின்ற உமேஷ் யாதவ் 13 ஓட்டங்களில் வெளியேற, இந்தியாவின் இன்னிங்ஸ் 129.4 ஓவர்களில் 455 ஓட்டங்களோடு முடிவுக்கு வந்தது.
இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், மொயீன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
