இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 108.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 319 ஓட்டங்கள் குவித்துள்ளது.

தொடக்க வீரர் முரளி விஜய் 126 ஓட்டங்களும், சேதேஷ்வர் புஜாரா 124 ஓட்டங்களும் குவித்தனர்.

ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 159.3 ஓவர்களில் 537 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 128, ஜோ ரூட் 124, மொயீன் அலி 117 ஓட்டங்கள் குவித்தனர். இந்தியத் தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 23 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 63 ஓட்டங்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் 25, கம்பீர் 28 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.

3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய இந்திய அணி, 2-ஆவது ஓவரிலேயே கம்பீரின் விக்கெட்டை இழந்தது. அவர் 72 பந்துகளில் 29 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார்.

இதையடுத்து விஜயுடன் இணைந்தார் சேதேஷ்வர் புஜாரா. விஜய் ஒருபுறம் நிதானமாக ஓட்டங்கள் சேர்க்க, மறுமுனையில் புஜாரா வேகமாக ஓட்டங்கள் சேர்த்தார். இதனால் விஜய் 129 பந்துகளிலும், புஜாரா 74 பந்துகளிலும் அடுத்தடுத்து அரை சதம் கண்டனர்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய புஜாரா, தேநீர் இடைவேளைக்குப் பிறகு 169 பந்துகளில் சதத்தை எட்டினார். 39-ஆவது டெஸ்டில் விளையாடி வரும் புஜாராவுக்கு இது 9-ஆவது சதமாகும். சொந்த மண்ணில் அவர் எடுத்த 7-ஆவது சதம் இது.

2-ஆவது விக்கெட்டுக்கு 209: புஜாராவைத் தொடர்ந்து முரளி விஜய் 254 பந்துகளில் சதமடித்தார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 7-ஆவது சதம் இது. இந்தியா 277 ஓட்டங்களை எட்டியபோது புஜாரா ஆட்டமிழந்தார். அவர் 206 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 124 ஓட்டங்கள் குவித்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் குக்கிடம் கேட்ச் ஆனார். புஜாரா-விஜய் ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 209 ஓட்டங்கள் குவித்தது.

இதையடுத்து விஜயுடன் இணைந்தார் கேப்டன் விராட் கோலி. அவர் ஒருபுறம் நிதானமாக ஓட்டங்கள் சேர்க்க, ஆட்டம் முடியும் தருவாயில் முரளி விஜய் ஆட்டமிழந்தார். அவர் 301 பந்துகளில் 4 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 126 ஓட்டங்கள் குவித்தார்.

பின்னர் வந்த அமித் மிஸ்ரா தான் சந்தித்த 2-ஆவது பந்திலேயே டக் அவுட்டானார். அதோடு 2-ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்தியா 108.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் குவித்துள்ளது. கோலி 70 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 26 ஓட்டங்கள் எடுத்து களத்தில் உள்ளார். இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இந்தியா இன்னும் 218 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.