ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச்சை இரண்டாவது பந்திலேயே பெவிலியனுக்கு அனுப்பினார் புவனேஷ்வர் குமார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்ததால், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. 

எனவே டி20 தொடரை வெல்வதற்கான வாய்ப்பை தக்கவைக்க, இரண்டாவது போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இந்நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் கோலி, பவுலிங்கை தேர்வு செய்தார்.

முதல் போட்டியில் களமிறங்கிய அதே அணியுடன் இந்திய அணி களமிறங்கியது. கோலி பவுலிங் தேர்வு செய்ததை அடுத்து ஆஸ்திரேலிய அனியின் கேப்டன் ஃபின்ச் மற்றும் ஷார்ட் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

முதல் ஓவரின் முதல் பந்தில் ஷார்ட் சிங்கிள் எடுக்க, இரண்டாவது பந்தில் ஆரோன் ஃபின்ச்சை வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார். ஒரு ரன்னுக்கே முதல் விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலிய அணி. முதல் ஓவரிலேயே ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் விழுந்ததை அடுத்து மைதானத்தில் குழுமியிருந்த இந்திய ரசிகர்கள் அரங்கமே அதிரும் அளவுக்கு ஆர்ப்பரித்தனர். 

இரண்டாவது ஓவரை கலீல் அகமது வீசினார். மீண்டும் புவனேஷ்வர் குமார் மூன்றாவது வீச, அந்த ஓவரில் இரண்டு கேட்ச்கள் தவறவிடப்பட்டன. மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் ஷார்ட் அடித்த பந்து எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் சென்றது. ஆனால் அந்த கேட்ச்சை ரிஷப் பண்ட் தவறவிட்டார். இதையடுத்து நான்காவது பந்தை கிறிஸ் லின் தூக்கி அடிக்க, பவுண்டரி லைனில் அழகாக பிடித்திருக்க வேண்டிய கேட்ச்சை பும்ரா தவறவிட்டதால் சிக்ஸர் ஆனது. இவ்வாறு புவனேஷ் வீசிய மூன்றாவது ஓவரில் மட்டுமே இரண்டு கேட்ச் வாய்ப்புகள் தவறவிடப்பட்டன. 

இதையத்து கலீல் அகமது வீசிய 4வது ஓவரில் கிறிஸ் லின் ஆட்டமிழந்து வெளியேற, ஷார்ட்டுடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். கலீல் அகமது வீசிய 6வது ஓவரில் ஷார்ட்டை போல்டாக்கி அனுப்பினார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 6 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது.