முதல் கோ கோ உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. நேபாளத்தை இறுதிப் போட்டியில் தோற்கடித்து ஆண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது. முன்னதாக, பெண்கள் அணியும் நேபாளத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

முதல் கோ கோ உலகக் கோப்பை 2025 இல் நேபாள அணியை வீழ்த்தி பட்டம் வென்ற இந்திய அணி புதிய வரலாறு படைத்துள்ளது. இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணியின் ஆட்டம் வேகம், உத்தி மற்றும் திறமையின் அற்புதமான வெளிப்பாடாக இருந்தது.

நேபாளத்திற்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி 54-36 என்ற கணக்கில் அபார வெற்றியைப் பெற்றது. கேப்டன் பிரதிக் வைக்கர் மற்றும் ராம்ஜி காஷ்யப் ஆகியோரின் சிறந்த ஆட்டத்தால் இந்திய அணி வெற்றிக் கனியைப் பறித்துள்ளது. பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியிலும் இந்திய அணி நேபாளத்தை எதிர்கொண்டது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனைகள் 78-40 என்ற உறுதியான ஸ்கோருடன் வெற்றியை உறுதி செய்தனர்.

முதல் கோ கோ உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பிரபலங்கள் பலர் நேரில் பார்வையிட்டது, இந்த வரலாற்று சிறப்புமிக்க விளையாட்டு நிகழ்வுக்கு மேலும் சிறப்பு சேர்த்தது. முன்னாள் மக்களவை சபாநாயகர் திருமதி சுமித்ரா மகாஜன், உச்ச நீதிமன்ற நீதிபதி ஸ்ரீ பங்கஜ் மிதல், மாண்புமிகு நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சர் ஸ்ரீ கிரண் ரிஜிஜு ஆகியோர் இறுதிப்போட்டிப் பார்த்து ரசித்தனர்.

ஒடிசாவின் விளையாட்டு மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஸ்ரீ சூர்யபன்ஷி சூரஜ், சர்வதேச கோ கோ கூட்டமைப்புத் தலைவர் ஸ்ரீ சுதான்ஷு மிட்டல், ஆர்எஸ்எஸ் இணைப் பொதுச் செயலாளர் ஸ்ரீ கிருஷ்ண கோபால் ஜி ஆகியோரும் போட்டியைக் காண வந்திருந்தனர். இவர்களின் வருகை ஒலிம்பிக் விளையாட்டாக மாறும் இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டான கோ கோவின் பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.

முதல் சுற்றில் ராம்ஜி காஷ்யப்பின் ஸ்கை டைவ் செய்து நேபாளத்தின் சூரஜ் புஜாராவைப் வீழ்த்தினார். பின்னர் சுயாஷ் கார்கேட் பாரத் சாஹுவைத் தொட்டு, 4 நிமிடங்களில் 10 புள்ளிகள் என்ற சிறந்த தொடக்கத்தை அளித்தார். இது முதல் சுற்றில் இந்திய அணிக்கு பிரகாசமான தொடக்கத்தை உறுதி செய்தது. இதனால், முதல் சுற்றின் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் லைன் 26-0 என இருந்தது. வெற்றியை நோக்கி சரியான தொடக்கமாகவும் அமைந்தது.

2வது சுற்றில் நேபாள அணியால் இந்திய அணியின் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. ஆனால், இந்திய அணியின் வேகத்துக்கு ஓரளவு முட்டுக்கட்டை போட்டனர். இருந்தாலும், ஆதித்யா கண்புலேவும் கேப்டன் பிரதிக் வைக்கரும் இந்த சுற்றில் இந்திய அணிக்கு வலுசேர்த்தனர். மேலும் ஜனக் சந்த், சூரஜ் புஜாரா இருவரின் சிறப்பான தாக்குதல்கள் காரணமாக, இரண்டாவது சுற்றில் இந்திய அணி 26-18 என முன்னிலையைத் தக்கவைத்தது.

இந்திய அணி 3வது சுற்றில் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் முன்னேறியது. கேப்டன் பிரதிக் வைக்கர் பல ஸ்கை டைவ்கள் மூலம் தனியாக ஜொலித்தார். மற்றொரு நட்சத்திரமான ராம்ஜி காஷ்யப்பும் அவருக்கு நல்ல ஆதரவு தந்தார். ஆதித்யா கண்புலேவும் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இப்படி இந்திய அணியின் கூட்டு முயற்சியால் இந்தச் சுற்றின் முடிவில் ஸ்கோர் லைன் 54-18 என உயர்ந்தது.

4வது சுற்றில் நேபாள அணி சரிவில் இருந்து மீண்டு வர கடுமையாகப் போராடியது. ஆனால் பிரதிக் வைக்கர் தலைமையில் சச்சின் பார்கோ உள்ளிட்ட டிஃபென்டர்கள் தங்கள் வலிமையை நிரூபித்தனர். மெஹுல், சுமன் பர்மன் இருவரும் சிறப்பாக செயல்பட்டனர். இதனால் இறுதிச் சுற்றின் முடிவில் 54-36 என்ற ஸ்கோரை எட்டிய இந்திய அணி உலகக் கோப்பையை உறுதி செய்தது.

முதல் கோ கோ உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை நோக்கிய இந்திய அணியின் பயணம் குறிப்பிடத்தக்கது. முதல் நிலையில் பிரேசில், பெரு மற்றும் பூட்டானுக்கு எதிராக உறுதியான வெற்றிகளுடன் தொடங்கிய இந்திய அணி, ஒவ்வொரு போட்டியிலும் முழுமையான ஆதிக்கம் செலுத்தியது. நாக் அவுட் சுற்றுகளிலும் அதே வேகம் தொடர்ந்தது. காலிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்த இந்திய அணி, அரையிறுதியில் வலுவான தென்னாப்பிரிக்க அணியைத் தோற்கடித்தது.