இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன்மூலம் இலங்கையை 5-0 என்ற கணக்கில் வொயிட் வாஷ் செய்துள்ளது.

ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் இலங்கை – இந்தியா அணிகளுக்கு இடையே கொழும்பில் நேற்று பகலிரவாக நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணியில் தொடக்க வீரர் டிக்வெல்லா 2 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கேப்டன் உபுல் தரங்கா நிலைத்து ஆடினார். பின்னர் வந்த முனவீராவும் 4 ஓட்டங்களில் அவுட்டானார்.

அடுத்து வந்த திரிமானி, தரங்காவுடன் இணை சேர்ந்தார். இந்த இணை 34 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள் எடுத்திருந்த உபுல் தரங்கா, அரைசதத்தை நெருங்கிய நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த மேத்யூஸ், திரிமானியுடன் இணைந்து நிலைத்தார். இந்த இணை 4-வது விக்கெட்டுக்கு 50 ஓட்டங்கள் சேர்த்தது. எனினும், அரைசதம் கடந்து 102 பந்துகளில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 67 ஓட்டங்கள் எடுத்திருந்த திரிமானியை போல்டாக்கினார் புவனேஸ்வர் குமார்.

பின்னர் சிறிவர்தனா களமிறங்க, மறுமுனையில் அரைசதம் கடந்த மேத்யூஸýம் 55 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில், சிறிவர்தனா 18 ஓட்டங்கள், டி சில்வா 9 ஓட்டங்கள், தனஞ்ஜெயா 4 ஓட்டங்கள், புஷ்பகுமாரா 8 ஓட்டங்கள், மலிங்கா 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

ஃபெர்னாண்டோ 7 ஓட்டங்களுடன் களத்தில் இருக்க, 49.4 ஓவர்களில் 238 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது இலங்கை.

இந்தியத் தரப்பில் புவனேஸ்வர் குமார் அதிகபட்சமாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர், இந்திய அணியின் ஆட்டத்தை ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே தொடங்கினர். இதில் தவனுக்குப் பதிலாக களம் கண்ட ரஹானே 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

அவரை அடுத்து களம் கண்ட கேப்டன் கோலி அபாரமாக ஆடினார். மறுமுனையில் ரோஹித் சர்மா 16 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்து சற்று நிலைத்த மணீஷ் பாண்டேவும் 36 ஓட்டங்களில் அவுட்டானார். கோலி அரைசதம் கடந்தும் நிதானமாகவே ஆடினார்.

அடுத்து கோலியுடன் இணைந்தார் கேதார் ஜாதவ். இந்த இணை சிறப்பாக ஆடி, 4-வது விக்கெட்டுக்கு 100 ஓட்டங்கள் சேர்த்தது. கோலி சதம் விளாசினார்.

இறுதியாக இந்தியா வெற்றி பெற 2 ஓட்டங்கள் தேவை இருந்த நிலையில் அரைசதம் கடந்து 73 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் எடுத்திருந்த கேதார் ஜாதவ் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து தோனி களத்துக்கு வர, கோலியும், தோனியும் தலா ஒரு ஓட்டங்கள் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தனர். அதன்படி 46.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 239 ஓட்டங்கள் எடுத்து இந்தியா வென்றது.

கோலி 116 பந்துகளில் 9 பவுண்டரிகள் விளாசி 110 ஓட்டங்களுடனும், தோனி ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆட்டநாயகன் விருதை புவனேஸ்வர் குமாரும், தொடர் நாயகன் விருதை ஜஸ்பிரித் பூம்ராவும் வென்றனர்.

இந்த போட்டியின் வெற்றி பெற்றதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என்றக் கணக்கில் வென்று இலங்கையை வொயிட்வாஷ் செய்து அசத்தியது இந்தியா.