காமன்வெல்த் ஸ்குவாஷ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா காலிறுதிக்கு முன்னேறி அசத்தினார். 

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

அதன்படி காமன்வெல்த் போட்டி ஸ்குவாஷ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் 14-ஆம் நிலை வீராங்கனையான ஜோஷ்னா சின்னப்பா ஆஸ்திரேலியாவின் டமிகா சாக்ஸ்பியுடன் மோதினார். 

இதில், டமிகா சாக்ஸ்பியை 11-3, 11-6, 11-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார் ஜோஷ்னா. 

இதற்கிடையே மற்றொரு பிரபல வீராங்கனையான தீபிகா பல்லிக்கல் 3-11, 6-11, 2-11 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் வலுவான வீராங்கனை அலிசன் வாட்டர்ஸிடம் வீழ்ந்து வெளியேறினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் விக்ரம் மல்ஹோத்ரா, 6-11, 11-8, 6-11, 6-11 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் நிக் மேத்யூவிடம் போராடி தோல்வி அடைந்து வெளியேறினார்.