காமன்வெல்த் பாட்மிண்டன் போட்டியில் கலப்பு அணிகள் பிரிவில் சிங்கப்பூரை வீழ்த்தி, இந்தியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

பளு தூக்குதல், ஹாக்கி, குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வெல்ல வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டது.

நேற்று நடைபெற்ற காமன்வெல்த் பாட்மிண்டன் போட்டியின் அரையிறுதியின் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. 

இதன்மூலமாக, கடந்த 2014-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான பிளே ஆஃப் சுற்றில் சிங்கப்பூரிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது இந்தியா. 

இதனையடுத்து இந்தியா தனது இறுதிச்சுற்றில், மூன்று முறை சாம்பியனான மலேசியாவை திங்கள்கிழமை சந்திக்கிறது.

அதேபோன்று, அரையிறுதியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய்னா 21-8, 21-15 என்ற செட் கணக்கில் ஜியா மின்னை வீழ்த்தினார். 

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் - அஸ்வினி பொன்னப்பா ஜோடி 22-20, 21-18 என்ற செட்களில் யோங் காய் டெர்ரி ஹீ-ஜியா யிங் கிறிஸ்டல் வோங் ஜோடியை வீழ்த்தியது.

ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-17, 21-14 என்ற செட்களில் கீன் யீவ் லோவை வென்றார்.