சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 12-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். 
 
அண்மையில் ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நிறைவடைந்தது. இதில், பங்கேற்றதன் அடிப்படையில் சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீரர் / வீராங்கனைகள் ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளனர்.

அந்தப் போட்டியின் காலிறுதி வரை முதல் முறையாக முன்னேறிய பிரணாய், 4 இடங்கள் முன்னேறி தற்போது 12-வது இடத்துக்கு வந்துள்ளார்.
 
உலகின் 2-ஆம் நிலையில் இருக்கும் இந்தியாவின் ஸ்ரீகாந்த் அதே இடத்தில் தொடரும்போதும், தனக்கும், உலகின் முதல் நிலை வீரரான டென்மார்க்கின் விக்டர் அக்ஸல்சனுக்கும் இடையிலான புள்ளிகள் வித்தியாசத்தை குறைத்துக் கொண்டுள்ளார். 

இந்தியாவின் சாய் பிரணீத் 15-ஆவது இடத்துக்கு சறுக்கியுள்ளார்.

அதேபோன்று மகளிர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து மூன்றாவது இடத்திலும், சாய்னா நெவால் 12-வது இடத்திலும் நீடிக்கின்றனர். 

மற்றொரு பிரிவான கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா - சிக்கி ரெட்டி இணை 24-வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

அதேபோன்று ஆடவர் இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் - சிரக் ஷெட்டி இணை ஓரிடம் முன்னேறி 20-வது இடத்துக்கு வந்துள்ளது.