இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 317 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இந்திய கேப்டன் விராட் கோலி 151 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். சேதேஷ்வர் புஜாரா 119 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 226 ஓட்டங்கள் குவித்தது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சிக் காத்திருந்தது. கே.எல்.ராகுல் டக் அவுட்டானார்.
மற்றொரு தொடக்க வீரரான முரளி விஜய் 20 ஓட்டங்களில் வெளியேற, 5 ஓவர்களில் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா.
இதையடுத்து 3-ஆவது விக்கெட்டுக்கு புஜாராவுடன் இணைந்தார் கேப்டன் கோலி. இந்த ஜோடி அசத்தலாக ஆட, இந்தியா சரிவிலிருந்து மீண்டது. கோலி 87 பந்துகளிலும், புஜாரா 113 பந்துகளிலும் அரை சதம் கண்டனர். இதனால் தேநீர் இடைவேளையின்போது இந்தியா 56.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 210 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
அரை சதமடித்த பிறகு வேகமாக ஓட்டங்கள் சேர்த்த புஜாரா, ஆதில் ரஷித் பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி 184 பந்துகளில் சதம் கண்டார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 10-ஆவது சதம் இதுவாகும்.
புஜாராவைத் தொடர்ந்து கோலி 154 பந்துகளில் சதமடித்தார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 14-ஆவது சதம் இது.
இந்தியா 248 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது புஜாரா ஆட்டமிழந்தார். அவர் 204 பந்துகளில் 2 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 119 ஓட்டங்கள் குவித்தார்.
இதையடுத்து களமிறங்கிய அஜிங்க்ய ரஹானே நிதானமாக ஓட்டங்கள் சேர்க்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய கோலி 238 பந்துகளில் 150 ஓட்டங்கள் எட்டினார்.
இந்தியா 316 ஓட்டங்களை எட்டியபோது ரஹானே ஆட்டமிழந்தார். அவர் 61 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 23 ஓட்டங்கள் எடுத்தார்.
இதையடுத்து அஸ்வின் களமிறங்கினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 317 ஓட்டங்கள் குவித்துள்ளது.
கோலி 241 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 151, அஸ்வின் 1 ஓட்டத்துடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
